சென்னை: வாட்ஸ் அப் பார்வர்டு செய்தியை உண்மை என்று நம்பும் கூட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, உண்மை வரலாறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக மகளிர் அணி மற்றும் கலைஞர் நூற்றாண்டை கொண்டாடும் வகையில், திராவிட இயக்க வரலாற்றையும் கொள்கைகளையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி முன்னெடுப்பில் நடந்த ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியின் இறுதிப் போட்டி சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது.
விழாவுக்கு கனிமொழி எம்பி தலைமை தாங்கினார். இதில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். வினாடி- வினா இறுதிப் போட்டியில் 18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் முதல் பரிசை காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கபிலன், உதயகுமார், நரேஷ்குமார்; இரண்டாவது பரிசை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபாலன், சோபியா, மோகன்ராஜ்; மூன்றாவது பரிசை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மோகன், தியாகராஜன், மாதவி நாகமுத்து; நான்காவது பரிசை மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கதிர்வேல், லட்சுமி, தீரமகாராஜன்; பதினெட்டு வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதல் பரிசை மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளிக்கண்ணு, சித்தி பர்விஷா, தர்ஷினி;
இரண்டாம் பரிசை மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நிதின் தங்கேஷ், அஜித்குமார், ஷேக் அமீன்; மூன்றாம் பரிசை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சனா, ராஜ, நதியா; நான்காம் பரிசை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கோபிகா, வெண்ணிலா, வேல்முருகன் பெற்றனர். முதலிடத்தைப் பிடித்த அணிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும், இரண்டாம் பரிசு 6 லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசு 3 லட்சம் ரூபாயும், நான்காம் பரிசு 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.
பரிசளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கலைஞர் கட்சி எல்லைகளைக் கடந்து – அரசியல் எல்லைகளைத் தாண்டி இன்றைக்கும் தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவராக இந்தியாவின் அரசியல் அடையாளமாக நிர்வாகத் திறமையின் இலக்கணமாக அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு ஆளுமையாக உயர்ந்து நிற்கிறார். அதை வெளிக்காட்டும் விதமாக இந்த போட்டியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் திமுக துணைப் பொதுச்செயலாளர் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழிக்கு பாராட்டுகள். பாசத்தைப் பொழியும்போது, கனிமொழியாகவும் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட நாடாளுமன்றத்தில் பேசும்போது, கர்ஜனை மொழியாகவும் இருக்கிறார் கனிமொழி.
சில நாட்களுக்கு முன்னர், இதே கலைஞர் அரங்கில் உதயநிதி ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ‘என் உயிரினும் மேலான’ இறுதிப் பேச்சுப் போட்டிக்கு 182 பேர் கூடினார்கள். அதில் இருந்து மூவரை தேர்ந்தெடுத்தார்கள். அந்த 182 பேரும் இப்போது தமிழ்நாட்டு மேடைகளில் முழங்கும் பேச்சுப் போராளிகளாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். இப்போது திராவிடக் களஞ்சியமாக நீங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களைப் போலவே பலரையும் உருவாக்கும் பணியை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது வாட்ஸ்அப் யுகம். வாட்ஸ்அப்-ல், யாரோ பார்வேர்டு செய்யும் செய்திகளை ஆராய்ந்து பார்க்காமல் உண்மை என்று நம்பும் ஒரு கூட்டம் இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், உண்மை வரலாறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
அனைவரும் அனைத்துப் புத்தகங்களையும் படித்துவிட முடியாது. அவர்களுக்கு கேப்சூல் மாதிரி வரலாற்றை திரட்டி நாம் புகட்ட வேண்டும். அதற்கு, இதுபோன்ற போட்டிகள் மிகச் சிறந்த வழிமுறையாக இருக்கும்.பேச்சாளர்களை எழுத்தாளர்களை இளந்தலைமுறையில் இருந்து உருவாக்க வேண்டும். புதிய புதிய செய்திகளை புதிய புதிய கோணத்தில் சொல்ல வேண்டும். சொல் புதிது சுவை புதிது பொருள் புதிது என்ற வகையில சொல்ல வேண்டும். மிக நீண்ட வரலாற்று தகவல்களைக்கூட மிகச் சுவையாக – மக்கள் மனதில் பதியும் வகையில் சொல்ல வேண்டும்.
நம்முடைய கொள்கை வீரர்களின் பேச்சு நறுக்கென்று இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும். ஒருவரின் பேச்சு, மூளையை தொட வேண்டும். அதன் மூலமாக, அவர்கள் மனதை ரீச் செய்ய வேண்டும். அப்படி நீங்கள் அனைவரும் கருத்து சொல்லும் ஸ்டைல்-ஐ உருவாக்கிக் கொள்ள வேண்டும். போட்டியில் கலந்துகொண்ட நிறையபேர் இங்கு இருக்கிறீர்கள். நான் இப்போது சில கேள்விகளை உங்களிடம் கேட்கப்போகிறேன். பதில் தெரிந்தவர்கள் உட்கார்ந்தே சத்தமாகச் சொல்லுங்கள் போதும்! லெனின்தான் உங்களிடம் கேள்வி கேட்டார். இப்போது ஸ்டாலின் கேட்கப் போகிறார்.
முதல் கேள்வி எளிமையானது ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்று சொன்னது யார்? (தந்தை பெரியார்). இரண்டாவது கேள்வி-பேரறிஞர் அண்ணா அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாள் டாக்டரிடம், “நான் படிக்கும் புத்தகத்தை, நாளை படித்து முடித்துவிடுவேன், அதன்பிறகு அறுவை சிகிச்சையை வைத்துக் கொள்ளலாம்” என்று சொன்னார். அது என்ன புத்தகம்? (மேரி கரோலி எழுதிய தி மாஸ்டர் கிறிஸ்டியன்). மூன்றாவது கேள்வி தந்தை பெரியார் “எனது பகுத்தறிவு சமூக சீர்திருத்தப் பணியின் முன்னோடி” என்று யாரைச் சொன்னார்? (அயோத்திதாசப் பண்டிதர்).
இவை சாதாரண கேள்விகள்தான். இதுபோன்று அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில், தியாக வரலாற்றை நம்முடைய இயக்கத்தின் வரலாற்றை மற்றவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் உங்களுடைய பணி அமைந்திட வேண்டும். அதற்கு இதுபோன்ற வினாடி-வினா நிகழ்ச்சிகள் நிச்சயமாகப் பயன்படும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் அணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, மாநில மகளிர் அணி நிர்வாகிகள், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை திமுக தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோவி.லெனின் தொகுத்து வழங்கினார்.
The post வாட்ஸ்அப் செய்தியை உண்மை என நம்பும் கூட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து உண்மை வரலாறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்: ‘கலைஞர் 100 வினாடி – வினா’ போட்டி பரிசளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் appeared first on Dinakaran.