வற்றாத செல்வங்களை அருளும் வரதராஜப் பெருமாள்

3 hours ago 2

தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள், கோயில்களின் தலைநகரமாக பார்க்கப்படுகிறது. கும்பகோணம் – தஞ்சை ஆகிய ஊரினுள், கோயில்கள் இருக்கின்றனவா? அல்லது அந்த நகரமே கோயில்களா? என்பது போல், சுற்று வட்டாரப் பகுதிகள் முழுவதிலும், எங்கு பார்த்தாலும் கோயில்களாகவே காணப்படுகிறது. அதில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள, “திங்களூர் கைலாசநாதர் கோயில்’’ மிக முக்கியமானதாகும். நவகிரகத் தலங்களுள் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த தலம், இந்த திங்களூர் ஆகும். 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதிஅடிகளார் அவதரித்ததும், இந்த திங்களூரில்தான். இத்தகைய பெருமை மிகு இடத்திலேயே, இன்னொரு பிரசித்திப் பெற்ற, யாவரும் அறியப்படாத, அற்புதம் மிக்க,“ஸ்ரீ வரதராஜப் பெருமாள்’’ கோயில் உள்ளது.

காஞ்சிபுரத்தில் எப்படி வரதராஜப் பெருமாள் அருள்பாலிக்கிறாரோ, அதே போல், திங்களூரிலே பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். தஞ்சை மாவட்டம், திருவையாறு தாலுகாவில் அமைந்துள்ளது, ராயம்பேட்டை என்னும் சிற்றூர். இங்கு, அம்மாலா என்னும் அக்ரஹாரப் பகுதி பிரசித்தியானவை. முன்னொரு காலத்தில், இந்த அக்ரஹாரத்தில் பல வேத விற்பன்னர்கள் வாழ்ந்துள்ளனர். ஆனால், தற்போது அவர்களில் ஒரு சிலர் மட்டுமே வாழ்ந்து வருகின்றார்கள்.மேலும், ஆண்டவன் ஆசிரமத்தின் முதல் பீடாதிபதியான ஸ்ரீ கோபாலராய மகாதேசிகன் ஸ்வாமிகள், இந்த ராயம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர். அதே போல், தற்போதைய 46வது பீடாதிபதியான அழகிய சிங்கர், இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்தான். தனது வேதப் படிப்பை அம்மாலா அக்ரஹாரத்தில் உள்ள “ராஜா வேத பாடசாலையில்’’ படித்தவர்.

இத்தகைய பிரசித்தி பெற்ற அம்மாலா அக்ரஹாரம் மற்றும் ராயம்பேட்டை அருகில், திங்களூரில், “ஸ்ரீ வரதராஜப் பெருமாள்’’ வீற்றிருக்கிறார். திங்களூர் அக்ரஹாரத்தினுள், ஒரு முனைப் பகுதியில் சிவன் கோயிலும், மறுமுனைப் பகுதியில் விஷ்ணு கோயிலான “ஸ்ரீ வரதராஜப் பெருமாள்’’ கோயிலும் உள்ளது. ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். மேலும், திருமணமாகாத ஆடவர் – பெண்கள் வரதராஜப் பெருமாளை மனமுருகி வேண்டினால், விரைவாகவே திருமணம் அருள்கிறார் என்கிறார்கள், பலனடைந்த பக்தர்கள். வரதராஜப் பெருமாளுக்கு தினமும் காலையில் அதாவது, ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகின்றன. பெருமாளின் பிறந்த நட்சத்திரம், விசாகம் என்பதால், மாதாந்திர விசாகம் நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் அலங்காரங்கள் வெகு சிறப்பான முறையில் நடைபெறும்.

அதே போல், ஆண்டுதோறும் வருகின்ற வைகாசி மாதத்தில் உற்சவங்கள், அபிஷேகம், சிறப்பு அலங்காரம், கருடசேவையுடன் வெகு விமரிசையாக நடைபெறும். மேலும், தை, ஆடி வெள்ளி அன்றும் அபிஷேகம், அர்ச்சனை மற்றும் பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பக்தர்களுக்கு சேவையினை வழங்குவார்கள். குறிப்பாக, ஆண்டுக்கு ஒருமுறை வரதராஜப் பெருமாளுக்கு, “ஏக தின லட்சார்ச்சனை’’ பிரமாண்டமான முறையில் பக்தர்களால் செய்யப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டுதான் இத்திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. வரதராஜப் பெருமாள் கோயிலில், பிரார்த்தனை செய்வதன் மூலம்,ஒருவரது ஜாதகத்தில் எதிர்கொள்ளும் நவகிரகத் தடைகள் அனைத்தும் நீங்கி, நல்ல திருமணத் துணையினை பெற்று, சகல வரங்களும் கிடைக்கும் என்கிறது வரலாற்று தகவல். மேலும், சில ஆண்டுகளுக்கு முன்புவரை மூன்று கருடசேவை நடந்துள்ளது. ஏதோ சில காரணத்தால் அவைதடைப்பட்டு இருக்கிறது.

மீண்டும் மூன்று கருட சேவையினை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்கிறார் கோயில் நிர்வாகி.இங்கு மூலவராக வீற்றிருப்பது. ஸ்ரீ தேவி – பூதேவி சமேதராக வரதராஜப் பெருமாள். தாயார்: பெருந்தேவி தாயார். அது போக, ஆஞ்சநேயர் சந்நதி, ஆழ்வார்களுக் கென தனிச் சந்நதி ஆகியவைகளும் இருக்கின்றன. அதே போல், இந்த திங்களூர் வரதராஜப் பெருமாள் கோயிலை அடுத்து, திருக்கண்டியூர் ஹரசாபவிமோசனப் பெருமாளும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் 7வது திவ்ய தேசமாகும். இந்த ஹரசபவிமோசனப்பெருமாள் கோயில், “பஞ்சகமல க்ஷேத்திரம்’’ என்றும் அழைக்கப்படுகிறது.புராணத்தின் படி, மகாபலி சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட இக்கோயில், குடமுருட்டி மற்றும் வெண்ணாறுக்கு இடையில் அமைந்துள்ளது. பிரம்மா மிகவும் ஆணவமாக, சிவனைவிட தாந்தான் உயர்ந்தவன் என்று கர்வம் கொண்டு, சிவனைப் போலவே உருமாறினார், பிரம்மா.

ஒருமுறை சிவனை சந்திக்க கைலாசத்திற்கு, பிரம்மதேவன் வருகிறார். அப்போது, சிவனின் மனைவியான பார்வதிதேவி குழப்பமடைந்து, வந்தது சிவன் என்று நினைத்து பிரம்மாவுக்கு பூஜை செய்கிறாள். இதனால், ஆத்திரம் அடைந்த சிவபெருமான், பிரம்மாவின் ஒரு தலையை கொய்து எடுக்க, சிவனுக்கு “பிரம்மஹத்ய தோஷம்’’ ஏற்பட்டது.மேலும், கொய்து எடுத்த பிரம்மாவின் மண்டை ஓடு, சிவனின் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டுவிட்டது. சிவனுக்கு நிவேதிக்கப்படும் அனைத்து உணவுகளையும், மண்டை ஓடு மட்டுமே சுவைத்து உண்டது. இதனால் செய்வது அறியாது, சிவபெருமான் திருக்கண்டியூரில் உள்ள கமலவல்லி தேவியையும், விஷ்ணுவையும் வேண்டினார்.அதன் பிறகே, சிவபெருமானின் கையில் இருந்த பிரம்மாவின் மண்டை ஓடு விலகி, சிவபெருமானுக்கு விமோசனம் கிடைத்ததாக கூறப்படுகிறது. பிரம்மாவின் தலை ஓடு இந்த திருத்தலத்தில் விழுந்து காணாமல் போனது. விஷ்ணுவின் உதவியால் சிவன், சாபவிமோச்சனம் பெற்றார்.

எனவே இந்த திருத்தலத்திற்கு, “ஹரசபவிமோசனா கோயில்’’ என்று அழைக்கப்படுகிறது.108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. மூன்று நிலை ராஜகோபுரம், கிழக்கு நோக்கிய இரு பிரகாரங்களுடன் கம்பீரமாக உள்ளது. அதன் உள்ளே, ஹரசபவிமோசனப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். கோயிலின் மேற்குப் பகுதியில், கபால தீர்த்தம் என்ற அழகிய குளம் உள்ளது. அதற்கு நேர் எதிர் புறம், பத்மதீர்த்தம் உள்ளது. வெளிப் பிராகாரத்தில், கமலவல்லி தாயார், நரசிம்மர், சுதர்சனர், ஆண்டாள், ஆழ்வார்கள் என தனித் தனிச் சந்நதிகள் உள்ளன.இந்த வளாகத்தில், பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் என்று அழைக்கப்படும் சிவபெருமானுக்கான கோயிலும் உள்ளது. இத்தலம் திரிமூர்த்தி ஸ்தலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் தீராத பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.பங்குனியில் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுகிறது. ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மகாதேசிகன் ஸ்வாமி முயற்சியால், இக்கோயில் புதுப்பிக்கப்பட்டது.(மூன்று கோயில்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புக் கொண்டுள்ளதால் மூன்று கோயில்களை பற்றியும் பார்த்ேதாம்)ஆக, திங்களூரில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் பக்தர்கள் பிரார்த்தனை செய்தால் மட்டுமே, சந்திரனும் – சிவனும் அருள்புரிவார்கள் என்பது முற்காலத்தில் இருந்து வரும் நம்பிக்கை. தொடர்புக்கு: 9967805158

எப்படி செல்வது: கும்பகோணம் சாலையில் திருவையாறிலிருந்து 3 கி.மீ தொலைவில் திங்களூர் உள்ளது.கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை: 07.30 முதல் 11.00 வரை, மாலை 05.00 முதல் 7.00 வரை.

The post வற்றாத செல்வங்களை அருளும் வரதராஜப் பெருமாள் appeared first on Dinakaran.

Read Entire Article