வருமான வரியை எளிதாக்க புதிய ஐடி மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்: அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகம்

3 months ago 8

புதுடெல்லி: புதிய ஐடி மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுகிறது. தற்போதுள்ள வருமான வரி சட்டங்கள் 60 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. அந்த காலக்கட்டத்திற்கு உரியவை. எனவே தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய வருமான வரி மசோதா தயார் செய்யப்பட்டுள்ளது. 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் புதிய வரி மசோதா நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

அந்த அடிப்படையில் வருமான வரிச் சட்டத்தை மறுஆய்வு செய்ய வருமான வரித்துறை 6,500 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய மசோதா, நேரடி வரிச் சட்டத்தை எளிமையாகப் புரிந்துகொள்ளவும், புதிய வரிச் சுமையை சுமத்தாமல் இருக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, நிதி தொடர்பான நாடாளுமன்றத்தின் நிலைக்குழுவுக்கு அனுப்பப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13ம் தேதி முடிவடைகிறது. அதை தொடர்ந்து மார்ச் 10ம் தேதி மீண்டும் கூடி ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும். அப்போது மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* துப்புரவுத் தொழிலாளர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் சபாய் கரம்சாரி கமிஷனுக்கான தேசிய ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ. 50.91 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

* திறன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டம் 2026 வரை தொடர அனுமதி வழக்கப்பட்டது. இந்த தகவல்களை ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

The post வருமான வரியை எளிதாக்க புதிய ஐடி மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்: அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் appeared first on Dinakaran.

Read Entire Article