வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து சென்னையில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

3 hours ago 1

சென்னை,

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார். தி.மு.க. சார்பில் எம்.எம். அப்துல்லா எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகிய கூட்டணி கட்சியினர் ஆர்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கண்டன உரை ஆற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசும்போது, 'மாநில அதிகாரம், நிதி ஒதுக்கீடு, மொழிக் கொள்கை என எல்லாவற்றிலும் மத்திய அரசு எதேச்சதிகார போக்கை கடைப்பிடிக்கிறது. வக்பு வாரிய சட்டத்திருத்தம் என்பது மூர்க்கத்தனமான, சர்வாதிகாரமான ஒன்று. அனைத்து மக்களும் ஒன்றிணைந்து பா.ஜ.க.விற்கு எதிராக போராட வேண்டும்" என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், 'மத சுதந்திரத்தை நசுக்கும் நோக்கில் வக்பு சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தை விசாரித்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். பா.ஜ.க. பாசிச கொள்கையை எதிர்த்து தேசிய அளவில் ஒன்றுகூடி களமாட வேண்டும்' என்றார்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, 'வக்பு சொத்துகளை நிர்மூலமாக்க சதித்திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் இல்லாதவர்களை நியமித்து, வக்பு வாரியத்தின் நோக்கத்தையே சிதைக்க துடிக்கின்றனர். சட்டத் திருத்தம் வக்பு வாரிய சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. இது நிச்சயம் முறியடிக்கப்படும்' என்று தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், அமைப்பு செயலாளர் சேக் முகம்மது அலி, தலைமை பிரதிநிதிகள் அப்துல் சலாம், முகம்மது சிராஜூதீன், அபிராமம் அப்துல்காதர், உசேன் கனி, மாவட்டத் தலைவர்கள் அபுபக்கர் கோரி, தாஹா நவீன், ரசூல், பனையூர் யூசுப், முகம்மது அலி, குணங்குடி மொய்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read Entire Article