வ.உ.சி-யின் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம்!

1 week ago 9

சுதந்திரப் போராட்டத்திற்காக இந்தியா முழுவதும் உயிர், உடைமை, உறவுகளை இழந்த தியாகிகள் ஏராளம். அந்த வகையில் தமிழகத்தில் நினைவுகூரப்படுபவர்களில் மிக முக்கியமானவர் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை ஆவார். தமிழ்நாட்டில் இன்றுவரையிலும் மறக்கமுடியாத பலரால் மிகவும் நேசிக்கப்படும், கொண்டாடப்படும் விடுதலைப் போராட்டத் தலைவர் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை. இவரை மக்கள் வ.உ.சி. என்று அழைத்தனர். இவர் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு 1872ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் மூத்த மகனாகப் பிறந்தார்.

வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.

தமிழ்மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப்பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார், ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1893- ஆம் ஆண்டு பாலகங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவர் பங்குகொண்டதோடு மற்றவர்களையும் பங்குகொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீரஉரையாற்றினார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். ‘பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’, இந்தியா- இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக்கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் தொடங்கத் தீர்மானித்தார்.

பிரிட்டானிய கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. வ.உ.சி பிரிட்டானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது. விடுதலைப் பித்தர் சிதம்பரம் பிள்ளை தனக்கு வழங்கப்பட்ட கொடுமையான தண்டனையைக் கேட்டு கவலைப்படவில்லை.

சிறைக்கு அவரை அழைத்துச் சென்றபோது, கவலை தோய்ந்த முகத்துடன் நின்றுகொண்டிருந்த அவரது நண்பர் மாசிலாமணியின் முகத்தைப் பார்த்து, தம்பி மாசிலாமணி வருந்தாதே. இருக்கிறது உயர்நீதி மன்றம், அங்கே வழக்கை அடித்துத் தள்ளிவிட்டு வந்துவிடுகிறேன் என்று ஆறுதல் கூறியபடியே சிறைக்குச் சென்றார் சிதம்பரம்.

சிறையிலிருந்து வெளியே வந்த பின் அவர் ஏழ்மையான வாழ்க்கையே வாழ்ந்துவந்தார். ஆனால், தனது கடன்களைத் திருப்பிச் செலுத்தாததால் அவர் தனது வாழ்வின் இறுதி வரை வறுமையில் வாழ்ந்துவந்தார். நவம்பர் 18, 1936 அன்று அவரது இறுதிமூச்சு தூத்துக்குடியிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில் பிரிந்தது.

The post வ.உ.சி-யின் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம்! appeared first on Dinakaran.

Read Entire Article