லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை.. பலி எண்ணிக்கை 492 ஆக அதிகரிப்பு : ஹிஸ்புல்லா 200 ராக்கெட்டுகளை ஏவி பதிலடி

2 hours ago 5

ஜெருசலேம்: லெபனானில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கி உள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் விரைவில் ஒரு வருடத்தை எட்ட உள்ளது. காசா பகுதியில் இருக்கும் ஹமாசை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசா மீதான தாக்குதலைக் கண்டித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர் கருவிகள் மற்றும் வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியதில் 37 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரம் பேர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து வடக்கு லெபனானில் ஹிஸ்புல்லாவின் கோட்டைகளைக் குறிவைத்தது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில் ஹிஸ்புல்லா தளபதி உட்பட 44 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக நேற்றுமுன்தினம் இஸ்ரேலின் ஹைபா நகர் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்கினர். இஸ்ரேலுடன் இனி நேருக்கு நேர் போரிட முடிவு செய்துள்ளதாக ஹிஸ்புல்லா அறிவித்தது. இந்த நிலையில், லெபனான் மீது நேற்று இஸ்ரேல் விமானங்கள் சரமாரியாக குண்டுமழை பொழிந்தன. லெபனான் மீது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 300 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதில், பலியானவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கி உள்ளது. 35 குழந்தைகள், 58 பெண்கள் உள்பட 492 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,645 பேர் காயமடைந்து உள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் இரவோடு இரவாக 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர்.இஸ்ரேலின் ராணுவ, விமானப்படை தளங்களை குறிவைத்து இந்த ராக்கெட்டுகளை ஏவியதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.பல ஆண்டுகளுக்கு பின் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிக பெரிய தாக்குதல் இதுவாகும்.

The post லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை.. பலி எண்ணிக்கை 492 ஆக அதிகரிப்பு : ஹிஸ்புல்லா 200 ராக்கெட்டுகளை ஏவி பதிலடி appeared first on Dinakaran.

Read Entire Article