லெபனானில் பேஜர்கள் வெடித்த விவகாரம்: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

1 day ago 3

பெரூட்,

லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் இஸ்ரேல் மீது ஏவுகணை, ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள லெபனானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் தாக்குதலால் இஸ்ரேலின் வடக்கு எல்லையில் வசித்து வந்த மக்கள் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதனிடையே, இடம்பெயர்ந்துள்ள மக்களை மீண்டும் வடக்குப்பகுதியில் குடியமர்த்துவதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது.

ராணுவ நடவடிக்கை மூலம் வடக்கு எல்லை பகுதியில் அமைதியை நிலைநாட்டி மக்களை குடியமர்த்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதனால் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், நேற்று ஒரேநேரத்தில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பயன்படுத்தி வரும் பேஜர்கள் வெடித்தன. இதனால் ஒட்டுமொத்த லெபனானும் மிரண்டுள்ளது. பேஜர் என்பது தகவல் தொடர்பு கருவியாகும். இந்த கருவியை ஹேக் செய்வது மிகவும் கடினமானது. செல்போன்களை ஹேக் செய்து இருப்பிடம், தகவல்களை இஸ்ரேல் கைப்பற்றிவிடும் என்று கருதிய ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பேஜர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

பயங்கரவாதிகள் தவிர அரசு அதிகாரிகள் உள்பட மேலும் சிலரும் இந்த பேஜரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், நேற்று மாலை லெபனான் முழுவதும் பேஜர்கள் மர்மமான முறையில் வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 ஆயிரத்து 750 பேர் படுகாயமடைந்தனர். இதில், 200க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேஜர்கள் மர்மமான முறையில் வெடித்து சிதறியதன் பின்னணியில் இஸ்ரேல் உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் லெபனானில் பேஜர்கள் வெடித்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வரலாறு காணாத இந்த தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article