லெபனானில் இஸ்ரேல் நடத்திய மின்னணு தாக்குதல்: மாறும் போர்க்களம்; உலக நாடுகளை அதிர வைத்த புதிய வன்முறை

4 hours ago 2

ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதற, 3000க்கும் மேற்பட்டோர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். இந்த தாக்குதலில் உயிர் பலி 12. உலகில் எந்த நாட்டிலும் இதுவரை நடக்காத புதிய வகை தாக்குதலை சந்தித்த லெபனான் மக்கள் நிலை குலைந்து போயினர். ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த மின்னணு யுத்தத்தின் சூத்ரதாரி இஸ்ரேல்தான் என்பது எல்லோருக்கும் புரிந்தது. வேவு பார்த்தல், மின்னணு யுத்த முறையில் இஸ்ரேல் அந்த அளவுக்கு கில்லாடி.  பாலஸ்தினத்தின் காசா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா களம் இறங்கி, தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதற்கு அவ்வப்போது இஸ்ரேல் பதிலடி கொடுத்து வந்துள்ளது. இப்போது, ஹிஸ்புல்லா அமைப்பு மீது முழு அளவில் தாக்குதல் நடத்துவதன் தொடக்கமாகவே இந்த பேஜர் வெடிப்பு சம்பவம் உலக நாடுகளால் பார்க்கப்பட்டது. முதல் நாள் பேஜர்கள் வெடித்த சம்பவம் நடந்த நிலையில், அடுத்த நாள் ஹிஸ்புல்லா பயன்படுத்திய வாக்கி டாக்கிகள் திடீரென வெடித்தன. இதில், 25 பேர் பலியாகிவிட, 450 பேருக்கு காயம். இதைதொடர்ந்து சோலார் சார்ஜர்கள் சில இடங்களில் வெடித்தன.

அடுத்து எந்த பொருள் வெடிக்குமோ என்ற அச்சத்தில் லெபனான் மக்களும், ஹிஸ்புல்லா அமைப்பினரும் உறைந்துபோக, இஸ்ரேலின் இந்த புதிய போர்முறை உலக நாடுகளை அதிரச் செய்துள்ளது.பேஜர்கள், வாக்கிடாக்கிகளை இஸ்ரேலால் வெடிக்கவைக்க முடியும் என்றால், போர் இத்தோடு முடியாது. இது தொடக்கம் தான் என்று மத்திய கிழக்கு வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் இந்த புதிய மின்னணு போர் தொழில் நுட்பம் மனித குலத்துக்கே பேராபத்து.

இஸ்ரேலின் இந்த நவீன யுத்த தொழில்நுட்பத்தால் இண்டர்நெட்டில் இணைக்கப்பட்ட எந்த ஒரு மின்னணு சாதனத்தையும் எளிதாக வெடிக்கச் செய்துவிட முடியும் அபாயம் உள்ளதாக மின்னணு தொழில்துறையினரே எச்சரிக்கின்றனர். இன்றைக்கு, செல்போன் இல்லாதவர்கள் யாருமே இல்லை. அதிலும் பெரும்பாலானவர்கள் வைத்திருப்பது ஸ்மார்ட் போன். 1 ஜிபி, 2 ஜிபி என்று நெட் பேக் வேறு. எந்தநேரமும் இந்த செல்போன்கள், இன்டர்நெட்டில் இணைக்கப்பட்டுள்ளன. அதில், இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் வீடியோ என்று பொழுது போக்குவதையே சிலர் பிழைப்பாக வைத்துள்ளனர்.

இந்த ஸ்மார்ட் போன்களை இஸ்ரேல் தனது தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஹேக் செய்து அதையே வெடிகுண்டாக மாற்றலாம் என்று அபாய சங்கு ஊதுகிறார்கள் வல்லுநர்கள். அதாவது நாம் ஒவ்வொருவரும் நம் கையில் ஒரு வெடிகுண்டுடன்தான் நடமாடிக்கொண்டிருக்கிறோம். இதெல்லாம் சாத்தியமா? என்றால் இன்டர்நெட் இணைப்பே இல்லாத பேஜர், வாக்கி டாக்கியை வெடிக்கச் செய்ய முடியும் என்றால், இது 100 சதவீதம் சாத்தியம்தான். செல்போன் மட்டுமா? இன்றைக்கு பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் புளூடூத் ஹெட் செட், மின்சார ஸ்கூட்டர், கார், பைக், சரக்கு வாகனங்கள், லேப்டாப், கம்ப்யூட்டர்களையும் வெடிக்கச் செய்யலாம் என்று அதிர்ச்சி பட்டியல் நீள்கிறது.

பேஜர்களில் உள்ள சிறிய லித்தியம் பேட்டரி வெடித்ததற்கே இவ்வளவு பாதிப்பு என்றால், மின்சார கார்களில் உள்ள லித்தியம் பேட்டரி வெடித்தால்…. நினைத்தாலே கதி கலங்குகிறது. மின்சார காரின் பேட்டரி வெடித்தால் அந்த பகுதியே நிர்மூலமாகிவிடும்.  இன்றைக்கு சாதாரணமாக இயங்கி வரும் மின்னணு சாதனங்களை நாளைக்கே வெடிக்கச் செய்யும் தொழில் நுட்பம் இன்றைக்கு இஸ்ரேல் கையில் உள்ளது. செல்போன், கம்ப்யூட்டர்கள், லேப்டாப், மின்சார வாகன மென்பொருள்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மேம்படுத்தப்படும்.

இதை 1.0,2.0, 3.0 என்று தொடர்ச்சி அந்தந்த நிறுவனங்களில் தங்கள் மென் பொருளில் குறிப்பிடுவார்கள். மேம்படுத்தப்பட்ட மென்பொருளை பயன்படுத்துவோரின் அனுமதியின்றியே நிறுவனங்களால் அந்தந்த கருவிகள், வாகனங்களில் பதிவேற்றம் செய்து செயல்படுத்த முடியும். மேம்படுத்தப்படும் மென் பொருளில் வெடிக்கச் செய்யும் வழிமுறைகளை சேர்ந்துவிட்டால் அவ்வளவுதான்.
இப்படி ஒரு மென்பொருளில் இயங்கும் கருவிகளை வெடிக்கச் செய்து விடலாம். இஸ்ரேல் தொடங்கி வைத்துள்ள இந்த மாறுபட்ட போர்க்களம், சாதாரணமானது அல்ல.

உலகின் ஒரு மூலையில் இருந்து கொண்டே ஒரே நேரத்தில் மற்றொரு மூலையில் உள்ள எதிரிகளை அழித்துவிடலாம். நேருக்கு நேர் போரிட்ட காலம் போய் பீரங்கிகள், ஏவுகணைகள் தொடங்கி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் காலமும் விரைவில் மலையேறிவிடும். ஆயுதமே தேவையில்லை. எதிரி நாட்டில் உள்ள ஒவ்வொரு மின்னணு பொருளுமே அவர்களுக்கு எதிரான ஆயுதமாக மாறிவிடும். மின்னணு பொருட்கள் வெடிகுண்டாக மாறும் சூழல் மிகவும் அபாயகரமானது. இஸ்ரேல் வசம் உள்ள இந்த நாசகார தொழில் நுட்பம் வருங்காலத்தில் தீவிரவாதிகள் கையில் சிக்கினால் உலகின் அழிவை யாராலும் தடுக்க முடியாது.

* வாக்கி டாக்கியும் டூப்ளிகேட்
வெடித்து சிதறிய வாக்கி டாக்கிகளில் ஜப்பானின் ஐகாம் நிறுவன தயாரிப்பு என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ஆனால், இந்த மாடல் வாக்கி டாக்கிகளின் தயாரிப்பை 2014லேயே நிறுத்திவிட்டதாக ஐகாம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், புதிய வாக்கி டாக்கிகளை 5 மாதத்துக்கு முன்தான் ஹிஸ்புல்லா புதிதாக வாங்கியுள்ளது. இந்த போலி வாக்கி டாக்கிகளை தயாரித்ததிலும் இஸ்ரேலின் கைவண்ணம் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

* வெடிக்கச் செய்தது எப்படி?
சில நிறுவனங்கள் மட்டுமே பேஜர்களை இன்றைக்கும் தயாரித்து வருகின்றன. இதனால், தைவானை சேர்ந்த கோல்டு அப்பலோ நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்துள்ளனர் ஹிஸ்புல்லா அமைப்பினர். இந்த நிறுவனத்திடம் இருந்து லைசென்ஸ் பெற்று பேஜர் தயாரிக்கும் ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் உள்ள பிஏசி கன்சல்டிங் நிறுவனம் தான் மொத்தமாக பேஜர்களை சப்ளை செய்துள்ளது.. தயாரிக்கும்போதே 28 கிராம் வெடிமருந்தை பேட்டரிக்கு அருகில் வைத்து சப்ளை செய்துள்ளனர்.

அத்தோடு, பேஜரில் தொடர்ந்து பீப் சத்தம் தொடர்ச்சியாக வந்தால் அந்த வெடி மருந்து வெடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர். அதே நேரத்தில், அதிக அதிர்வெண் கொண்ட சிக்னல்களை பயன்படுத்தி பேட்டரியின் வெப்பத்தை பயன்படுத்தி பேஜர்கள் வெடிக்கச் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை இயற்பியலாளர்கள் எழுப்பி உள்ளனர். மேலும் பேஜர்களை தயாரித்த பிஏசி கன்சல்டிங் நிறுவனததின் பின்னணியில் இஸ்ரேல் அரசு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

* பேஜர்களுக்கு மாறியது ஏன்?
மற்றவர்களை போல ஹிஸ்புல்லா அமைப்பினரும் செல்போன்களை தான் பயன்படுத்தி வந்தனர். காசா போரை தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஹிஸ்புல்லா அமைப்பினர் துவங்கியதும், செல்போன்கள் உதவியோடு அவர்களை கண்டறிந்து துல்லியமாக தாக்கி அழிக்க துவங்கியது இஸ்ரேலின் மொசாத் உளவு படை.

இதனால், பழைய தொழில்நுட்பத்துக்கு மாறினார்கள் ஹிஸ்புல்லா அமைப்பினர். 1990களில் துவங்கி 2000த்தின் துவக்கத்திலேயே உலகின் பெரும்பாலான நாடுகளில் காணாமல் போன பேஜர்கள் அவர்களுக்கு கைகொடுத்தது. இந்த கருவியை பயன்படுத்தினால் இருப்பிடத்தை யாராலும் கண்டறிய முடியாது. ஆனால், தகவல் மட்டும் குறுஞ்செய்தியாக போய் சேர்ந்துவிடும்.

* மீண்டும் லேண்ட் லைன்?
புதிய ஆபத்தை நோக்கி உலகம் செல்லும் இந்த சூழலில், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை மக்கள் தூக்கி எறிந்துவிடும் காலம் வரலாம். பழைய காலம் போல் லேண்ட் லைன் போன்களுக்கு மவுசு பிறக்கலாம். எதை தைரியமாக பயன்படுத்துவது? எதை கழித்துக் கட்டுவது என்ற குழப்பத்தில் மக்கள் தவிக்கும் நிலை உருவாகி உள்ளது.

The post லெபனானில் இஸ்ரேல் நடத்திய மின்னணு தாக்குதல்: மாறும் போர்க்களம்; உலக நாடுகளை அதிர வைத்த புதிய வன்முறை appeared first on Dinakaran.

Read Entire Article