லட்டு பிரசாதத்தில் புகையிலை பாக்கெட்டா..? - திருமலை திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு

2 hours ago 3

திருமலை,

திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் கடந்த ஆட்சியின் போது கலப்பட நெய் சேர்க்கப்பட்டதாக ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். அதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார். இது தேசிய அளவில் அதிர்வலைகளை எழுப்பி இருந்தது.

இந்த சூழலில், இந்த விவகாரம் அடங்குவதற்குள் திருப்பதி லட்டில் புகையிலை இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கம்மம் மாவட்டம் - கார்த்திகேயா டவுன்ஷிப்பை சேர்ந்த பத்மாவதி, கடந்த 19-ம் தேதி திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்துள்ளார். வீடு திரும்பும் போது லட்டு பிரசாதம் வாங்கி வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததும் அக்கம் பக்கத்தினருக்கு லட்டு கொடுக்க முடிவு செய்துள்ளார். அப்போது அதில் வித்தியாசமான வாசம் வந்துள்ளது. தொடர்ந்து அதை உடைத்து பார்த்த போது லட்டுக்குள் புகையிலை காகிதத்தில் வைத்து சுற்றி இருப்பதை கவனித்துள்ளார். புனிதமான லட்டு பிரசாதத்தில் புகையிலையை பார்த்து மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இது திருப்பதி கோவில் பக்தர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில், "திருப்பதி லட்டு பிரசாதத்தில் புகையிலை பாக்கெட் இருந்ததாக வெளியான தகவல் உண்மையல்ல. சில பக்தர்கள் இப்படி தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவது முறையற்றது.

திருப்பதி லட்டு, விதிமுறைகளை பின்பற்றியும், பக்தி உணர்வுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் தயாரிக்கப்படுகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான லட்டுகள் இப்படி கண்காணிப்பு கேமராக்கள் முன்னிலையில் தயாரிக்கப்படுகின்றன" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கலப்பட நெய்யினால் லட்டு பிரசாதம் உட்பட மேலும் சில பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு அவை விநியோகம் செய்யப்பட்டதால், கோவிலில் பரிகார தோஷ பூஜைகள் நடத்துவது நல்லது என ஆகம வல்லுனர்கள் கருத்து தெரிவித்ததால், நேற்று முன் தினம் (திங்கட்கிழமை) திருமலை யாக சாலையில் சாந்தி ஹோமம் நடந்தது. கோவிலின் மடப்பள்ளி, மாட வீதிகள் மற்றும் கோவிலுக்குள் உள்ள அனைத்து சன்னதிகள், கொடிமரம், பலிபீடம் ஆகிய இடங்களில் வாஸ்து சுத்தி மற்றும் பஞ்சகாவ்ய கும்ப ஜல சம்ப்ரோக்ஷணம் ஆகியவை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சுவாமிக்கு விசேஷ நைவேத்தியம் படைக்கப்பட்டது. இந்த ஹோமத்தால் தோஷங்கள் நீங்கியதாக தீட்சிதர்கள் தெரிவித்தனர்.

Read Entire Article