ரூ.660 கோடியில் கட்டப்பட்ட 1046 அடுக்குமாடி குடியிருப்புகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

3 hours ago 1

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (27.2.2025) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் சென்னை மாவட்டம், செனாய் நகரில் ரூ.131 கோடியே 27 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 240 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கே.கே நகரில் ரூ.51 கோடியே 29 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 120 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்துவைத்தார்.

இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம், ராஜகுளிப்பேட்டையில் ரூ.43 கோடியே 81 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 116 அடுக்குமாடி குடியிருப்புகள்; சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ், சென்னை மாவட்டம் நெற்குன்றத்தில் ரூ.433 கோடியே 59 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 570 அடுக்குமாடி குடியிருப்புகளையும் அவர் திறந்துவைத்தார்.

ஆக மொத்தம் ரூ.659 கோடியே 96 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 1046 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டம், செங்குளத்தில் ரூ.116 கோடியே 55 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 464 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் தமிழ்நாடு அரசு கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதேபோல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.15 கோடியே 81 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை அவர் திறந்துவைத்தார்.

மேலும், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் ரூ.13 கோடிக்கான காசோலையை சுசீந்திரம் –கன்னியாகுமரி தேவஸ்தான கோவில்கள் அறங்காவலர் குழுத் தலைவர் கோ.ராமகிருஷ்ணனிடமும், புதுக்கோட்டை தேவஸ்தான நிர்வாகத்தின்கீழ் உள்ள 225 கோவில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் ரூ.8 கோடிக்கான காசோலையை புதுக்கோட்டை மாவட்ட கோவில்களின் தக்கார் / உதவி ஆணையர் வே.சுரேஷிடமும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்திலுள்ள 88 கோவில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் ரூ.6 கோடிக்கான காசோலையை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லேவிடமும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

Read Entire Article