ராதாபுரம், மே 12: ராதாபுரத்தில் பிரசித்தி பெற்ற வரகுண பாண்டீஸ்வரர் கோயிலில் சித்திரை தெப்ப திருவிழாவில் பக்தர்கள்திரளானோர் கலந்து கொண்டனர். ராதாபுரத்தில் பிரசித்தி பெற்ற வரகுணபாண்டீஸ்வரர் சமேத நித்ய கல்யாணி அம்பாள் கோயிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் 9ம் நாளான கடந்த 9ம் தேதி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப திருவிழா தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி இரவு 9 மணியளவில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலித்தனர். தெப்ப உற்சவத்தின் போது மேளதாளத்துடன் வாணவேடிக்கை நடைபெற்றது. விழாவில் பஞ்சாயத்து தலைவர்கள் ராதாபுரம் பொன் மீனாட்சி அரவிந்தன், சிதம்பரபுரம் பேபி முருகேசன், உதயத்தூர் மணிகண்டன் மற்றும் ஊர் பெரியோர்களுக்கு பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டது.
விழாவில் இன்னிசை கச்சேரி கலைஞர்களுக்கு சபாநாயகர் அப்பாவு ரொக்க பரிசு வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அறங்காவலர் அரவிந்தன், மும்பை தொழிலதிபர் செல்வி சிவா, சண்முகவேல் ராதாபுரம் மீரான் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டதுவிழாவிற்கான ஏற்பாடுகளை ராதாபுரம் பஞ்சாயத்து தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தன், துணைதலைவர் சபாபதி பலவேசம் மற்றும் கோயில் அறங்காவலர தலைவர் கோவிந்தராஜ், அறங்காவலர்கள் அகஸ்டின், ராமையா, அரவிந்தன், கோயில் நிர்வாக அதிகாரி பிரியா ஆகியோர் செய்து இருந்தனர்.
விரைவில் கும்பாபிஷேகம் சபாநாயகர் அப்பாவு உறுதி
விழாவில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு கூறுகையில், ‘தமிழகத்தில் இதுவரை 2037 கோயில்களுக்கு கும்பாபிஷேகத்தை தமிழ்நாடு முதல்வர் நடத்தியுள்ளார். ராதாபுரம் வரகுண பாண்டீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகளுக்கு ரூ.52 லட்சத்தை தமிழ்நாடு முதல்வர் தந்துள்ளார். இப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ராதாபுரம் ஆதிதிராவிட சமூக மக்களுக்கு 8ம் திருவிழா கிடைக்க முயற்சி செய்து, அதனை மாற்றி தர ஏற்பாடு செய்தேன். இந்த அரசு அனைத்து சமூக மக்களுக்கான அரசு என்பதை இதன் மூலம் மீண்டும் நிருபித்து உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற சாதனைகள் இந்தாண்டும் தொடரும். விரைவில் ராதாபுரம் தொகுதியில் வீடுகளுக்கு தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் குடிநீராக வீடுகள் தோறும் வழங்கப்படும்’ என்றார்.
The post ராதாபுரத்தில் பிரசித்தி பெற்ற வரகுண பாண்டீஸ்வரர் கோயிலில் தெப்ப திருவிழா appeared first on Dinakaran.