ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சந்திரகலா தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, பேனர் பிடித்தபடி மனு அளிக்க வந்த 4 பேர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார், விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தி, தண்ணீரை ஊற்றினர்.
பின்னர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், தீக்குளிக்க முயன்றவர் வாலாஜா சவுகார் தெருவை சேர்ந்த சேகர்(44) என்பது தெரியவந்தது. இவர் பூக்கடை வைத்துள்ளார்.
இவருக்கு சொந்தமான 2.42 ஏக்கர் நிலம் உள்ளதாம். மகள் திருமணத்திற்காக அந்த நிலத்தை அடமானம் வைத்து ரூ.15 லட்சம் வாங்கித்தரும்படி இடைத்தரகர்களை அணுகியுள்ளார். இதனால் இடைத்தரகர்கள், ஊராட்சி மன்ற தலைவர் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளனர்.
அவர் கடந்தாண்டு ஜூலை மாதம் கையெழுத்து வாங்கிக்கொண்டு ரூ.14 லட்சம் கொடுத்தாராம்.இந்த தகவலை சேகர், தனது அண்ணன் மகனிடம் தெரிவித்துள்ளார். அவர், வில்லங்கம் சான்றை சரிபார்த்துள்ளார். அப்போது சேகர் அடமானம் வைத்த அதே நாளில், அந்த நிலத்தை சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
அடமானம் எனக்கூறி, பவர் எழுதி வாங்கி நிலத்தை விற்றுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சேகர் இடைத்தரகர்களிடம் கேட்டுள்ளார். இது தெரியாமல் நடந்திருக்கும், கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்தால் நிலத்தை உங்களுக்கே கொடுத்து விடுகிறோம் என இடைத்தரகர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால் சேகர், ரூ.14 லட்சத்தை இடைத்தரகர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக்கொண்ட இடைத்தரகர்கள், 2 நாளில் பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதுவரை நிலத்தை திருப்பி தரவில்லையாம். கொலை மிரட்டல் விடுக்கிறார்களாம்.இதுகுறித்து எஸ்பி அலுவலகம் மற்றும் நில அபகரிப்பு பிரிவில் புகார் கொடுத்தும் விசாரணை நடத்தவில்லையாம்.
இதனால் மனமுடைந்த சேகர், அவரது மனைவி, மகன், மகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.மேலும், சேகர் அளித்த மனுவில் எனது நிலத்தை மீட்டு தர வேண்டும். ஏமாற்றிய இடைத்தரகர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
The post ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் பூ வியாபாரி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.