ராசிக்கல் அணிய விருப்பமா..? இதை செய்ய மறக்காதீங்க..!

1 week ago 9

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், எந்த காரியத்தை தொடங்கினாலும் ஜோதிடரை அணுகி நாள், நட்சத்திரம் பார்ப்பது வழக்கம். சிலர் நினைத்த காரியம் நிறைவேற அதிர்ஷ்டக்கல் அணிவது குறித்து கேட்டறிந்து அதன்படி தங்களின் ராசிக்குறிய கற்கள் பதித்த ஆபரணங்களை அணிவதை வழக்கமாக கொண்டடிருக்கிறார்கள்.

அதேசமயம், ராசிக்கல் அணிந்தால் யோகம் வருமா? ராசிக்கற்கள் பயன் தரும் என்பது உண்மையா? என்ற பொதுவான கேள்வியையும் சிலர் முன்வைக்கின்றனர்.

நவரத்தினங்களுக்கு சக்தி உண்டா?

ஆதி காலத்தில் கோவில் கருவறையில் மூலவரை பிரதிஷ்டை செய்யும் முன் அந்த இடத்தில் நவரத்தின கற்களை வைத்துவிட்டு அதன் மேல்தான் சிலையை வைத்து பூஜை செய்துள்ளனர். பழங்காலத்தில் நவரத்தின கற்களை பெரும்பாலும் அரசர்களும் பெரும் செல்வந்தர்களுமே பயன்படுத்தினர். மன்னர்கள் தங்கள் கிரீடம் மற்றும் ஆடை ஆபரணங்களிலும், குறிப்பாக மோதிரத்தில் ரத்தினங்களை பதித்து அணிந்துள்ளனர். ரத்தினத்தை வைத்து சிலப்பதிகாரம் என்ற பெரும் காப்பியமே உருவானது. சாம்ராஜ்யத்தையே இழக்கக் கூடிய அளவிற்கு ரத்தினக் கற்கள் மகிமை வாய்ந்ததாக திகழ்ந்துள்ளன.

மருத்துவத்திற்கும் ரத்தினத்திற்கும் சம்பந்தம் உண்டா?

மருத்துவத்திற்கும் ரத்தினத்திற்கும் சம்பந்தம் உண்டா என்றால் நிச்சயம் உண்டு. எப்படி என்றால் சித்த மருத்துவத்தில் முத்துக்களில் இருந்து முத்துப் பற்பம் தயார் செய்கின்றனர். அதே போன்றுதான் பவளக் கற்களில் இருந்து பவளப் பற்பத்தை உருவாக்குகின்றனர். சித்தர்கள் கண்டுபிடித்த சித்த மருத்துவத்திலும் இதன் பயனை நாம் அறியலாம்.

ஜோதிடரீதியாக ராசிக்கல் அணிதல்

ஒவ்வொரு ராசிக்குமான பொதுவான ராசிக்கற்கள், கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அவை வருமாறு:

மேஷம் - பவளம்

ரிஷபம் - வைரம்

மிதுனம் - மரகதம்

கடகம் - முத்து

சிம்மம் - மாணிக்கம்

கன்னி - மரகதம்

துலாம்- வைரம்

விருச்சிகம் - பவளம்

தனுசு - புஷ்பராகம்

மகரம் - நீலம்

கும்பம் - நீலம்

மீனம் - புஷ்பராகம்

மேற்கண்ட பட்டியலின்படி இந்த ராசிக்கு இந்த கற்கள் அணியலாம் என்று ரத்தின கடைக்காரர்கள் விளம்பர பலகைகளில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அவ்வாறு நவரத்தின கற்களை அணிந்தால் முழுமையான பலன் தருமா? என்றால் கேள்விக்குறிதான்.

உதாரணமாக மேஷ ராசி நபர்கள் 3 பேரை எடுத்துக் கொள்வோம் மேற்கண்ட அட்டவணைப்படி மேஷ ராசிகார அன்பர்கள் மூன்று நபர்களும் பவளத்தை அணிந்தால் மூவருக்குமே வெற்றி கிடைக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது. மூன்று நபர்களில் ஒருவருக்கு மிக உயர்ந்த நற்பலன்களும், ஒருவருக்கு சாதாரண பலன்களும், மற்றொரு நபருக்கு தீமையான பலன்களும் கிடைக்கும்.

'எனது ராசிக்கு ஏற்ற கல் தானே அணிந்தேன்? அப்படி இருந்தும் ஏன் என் வாழ்வில் நற்பலன்கள் கிடைக்கவில்லை?' என்று கேட்கும் நிலை உள்ளது. எனவே, பொத்தாம் பொதுவாக ராசிக்கல் அணிந்தால் இதுபோன்ற கேள்விகளுக்கு வழிவகுக்கும்.

அதேபோல், எண் கணிதப்படி அதாவது நியுமராலஜிபடியும் மற்றும் பெயரியல்படியும் கற்களை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்வதால் அதிர்ஷ்டங்களை பெற இயலும் என்றும் ஜோதிடர்கள் குறிப்பிட்டு உள்ளனர். எண் கணிதப்படி நவரத்தின கற்கள்:

1,10, 19, 28 - மாணிக்கம்

2, 11, 20, 29 - முத்து

3, 12, 21, 30 - புஷ்பராகம்

4, 13, 22, 31 - கோமேதகம்

5, 14, 23 - மரகதம்

6, 15, 24 -வைரம்

7, 16, 25 - வைடூரியம்

8, 17, 26 - நீலம்

9, 18, 27 - பவளம்

ஒவ்வொரு கிரகத்திற்கும் என்ன கற்கள்? என்ன என்பதை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். அவை..

சூரியன் - மாணிக்கம்

சந்திரன் - முத்து

செவ்வாய் - பவளம்

புதன் - மரகதம்

குரு - புஷ்பராகம்

சனி - நீலம்

ராகு - கோமேதகம்

கேது -  வைடூரியம்

ஒவ்வொரு தசாவுக்கும் ஒவ்வொரு கல்லா?

இதேபோல் ஒவ்வொரு தசா நடக்கும்பொழுதும் ஒவ்வொரு நவரத்தின கற்களை போடலாம் என்றும் ஒரு சில ஜோதிடர்கள் தங்கள் வாடிக்கையாளருக்கு அறிவுறுத்துகின்றனர். உதாரணமாக ஒருவருக்கு ராகு தசா நடந்து கொண்டிருந்தால் அவர் கோமேதகம் அணிந்து கொள்கின்றனர். இன்னும் ஒரு சிலர் குரு தசா நடந்து கொண்டிருந்தால் புஷ்பராக கற்களை அணிந்து கொள்கின்றனர். அந்த தசை முடிந்ததும் அடுத்த தசா சனிதசா என்று ஆரம்பித்து கொள்கிறது என்றால் அதற்கேற்ற கல்லான நீலக்கல்லை அணிகின்றனர்

இவ்வாறு அணிவதும் சரியான முறையல்ல. ஒவ்வொரு தசா மாறும் பொழுதும் ஒவ்வொரு கற்களை போட்டுக் கொண்டால் பலன் தராது. ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒவ்வொரு தசாநாதன் நன்மை தருவார் அல்லது தீமையான பலன்களை தருவார். அவ்வாறு இருக்க, தீமையான தசா நடக்கும்போது அந்த கற்களை அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது ஏற்புடையதல்ல.

அதாவது, அவரவர் ஜாதகப்படி யோகாதிபதி கற்களை அணிய வேண்டும். அதற்கு ஜாதகம் தேவையாகிறது. அவரவர் ஜாதக லக்னப்படி பார்த்து எந்த கோள் எந்த ஸ்தானத்தின் பலம் அதிகமாக இருக்கிறதோ அதாவது யோகம் நிறைந்து இருக்கிறது. அந்த கற்களை அணிந்து கொண்டால் நிச்சயமாக நமக்கு நன்மைகளை தர இயலும். மாறாக பகை கிரகத்தின் கற்களை அணிந்து கொண்டால் நற்பலன்களை தர இயலாது. ஏற்கனவே பிரச்சினையில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் மேலும் அதிகமான பிரச்சினைகளை எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை.

எனவே, நவரத்தின கற்களை நாம் தேர்ந்தெடுக்கும்போது ஜாதக ரீதியாக பார்த்துவிட்டு, அதாவது எண் கணிதம், ஜாதகம் மற்றும் கைரேகை இவைகளின் நிலையை கொண்டு நாம் தேர்வு செய்து யோக கிரகங்கள் எது என்பதை தெரிந்து அணிந்து கொண்டால் நிச்சயமாக நல்ல பலன்களை பெற இயலும். ஜோதிடரிடம் தகுந்த ஆலோசனை பெற்று, ராசிக்கற்களை தேர்வு செய்து அணிந்தால் அதிர்ஷ்டம் நிச்சயம் என்றே சொல்லலாம்.

கட்டுரையாளர்: திருமதி N.ஞானரதம்

செல்: 9381090389.

Read Entire Article