ரஷியா, அமெரிக்காவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த இந்தியா

3 weeks ago 4

புதுடெல்லி,

உலகின் 3-வது பெரிய எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வு நாடான இந்தியா, வெளிநாடுகளில் இருந்து சுமார் 52 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. மத்திய கிழக்கில் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்த இந்தியா கடந்த 2022-ம் ஆண்டில் உக்ரைன்- ரஷியா போருக்கு பிறகு ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய தொடங்கியது.

சில ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தவிர்த்த காரணத்தால் இந்தியாவுக்கு குறைந்த விலையில் ரஷியா வழங்கி வருகிறது. ரஷியாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 1 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த நிலையில் குறுகிய காலத்தில் 44 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த மாதம் ரஷியாவில் இருந்து தினமும் 22 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத்தில் இருந்து வாங்கிய மொத்த அளவை விட இது அதிகம். கடந்த மாதத்தில் ரஷியாவில் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஒரு நாளைக்கு 19.6 லட்சம் பீப்பாய்கள் ஆகும். இந்த மாதத்தில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி தினமும் 4 லட்சத்து 39 ஆயிரம் பீப்பாய்களாக உயர்ந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் வாங்கப்பட்ட ஒரு நாளைக்கு 2 லட்சத்து 80 ஆயிரத்து பீப்பாய்களை விட அதிகமாகும்.

இந்நிலையில் இஸ்ரேல்- ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. 2 நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில், எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய போக்குவரத்து பாதையாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது. இந்த பாதை வழியாகத்தான் இந்தியா தனது அனைத்து எண்ணெய், எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல் இதுவரை எண்ணெய் வினியோகத்தை பாதிக்கவில்லை என்றாலும், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கப்பல் உரிமையாளர்கள் வளைகுடாவுக்கு காலி டேங்கர்களை அனுப்ப தயங்குகிறார்கள்.

Read Entire Article