மைக்கேல்பட்டி மாணவி தற்கொலைக்கு மதமாற்ற முயற்சி காரணம் இல்லை : ஐகோர்ட் கிளையில் சிபிஐ திட்டவட்டம்

1 day ago 2

மதுரை: மாணவி தற்கொலைக்கு மதமாற்ற முயற்சி காரணமில்லை என ஐகோர்ட் கிளையில் சிபிஐ தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அடுத்த மைக்கேல்பட்டியில் ஒரு தனியார் பள்ளி விடுதியில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி மாணவி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியை மதம் மாற வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்தனர். அதே நேரத்தில் தன்னை மத மாற்ற முயற்சித்ததாக மாணவி கூறியதாக ஒரு வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வழக்கை சிபிசிஐடி அல்லாத வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரி மாணவியின் தந்தை மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி 2022ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி உத்தரவிட்டது. இதற்கிடையே, மாணவி தற்கொலை வழக்கில் விடுதி காப்பாளரான சகாயமேரியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வந்தார். இந்த வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சகாயமேரி மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘மாணவி உயிரிழப்பிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை, மதம் மாறக் கோரி யாரும் வற்புறுத்தவில்லை. எனவே, இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன், முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில், ‘இந்த வழக்கு தொடர்பாக 141 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. 265 ஆவணங்களும், 7 பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. நன்றாக படிக்கும் மாணவியை மற்ற வேலைகளைச் செய்யுமாறு கூறியுள்ளனர். இதனால், அவர் படிப்பில் பின் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களுக்காகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கான ஆவணங்கள் உள்ளன. ஆனால் மத மாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடைபெற வில்லை. எனவே, குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டியதில்லை’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனு மீதான விசாரணையை செப்.24க்கு தள்ளி வைத்தார்.

The post மைக்கேல்பட்டி மாணவி தற்கொலைக்கு மதமாற்ற முயற்சி காரணம் இல்லை : ஐகோர்ட் கிளையில் சிபிஐ திட்டவட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article