முக்கிய சந்திப்பு

2 hours ago 3

தமிழ்நாட்டிற்கு அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று திரும்பிய கையோடு, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து, 50 நிமிடம் பேசியுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் 3 கோரிக்கை மனுவை நேரில் அளித்துள்ளார். இந்த சந்திப்பில் முக்கியமாக, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ் (சமக்ர சிக்ஷா) நிதி ஒதுக்கீடு குறித்து முதல்வர் வலியுறுத்தி உள்ளார். 2024-25 கல்வி ஆண்டுக்காக இந்த திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 60 சதவீத நிதியை (ரூ.2,152 கோடி) ஒன்றிய அரசு 4 தவணைகளாக கொடுக்கும். முதல் தவணை ஜூன் மாதத்தில் வழக்கமாக விடுவிக்கப்படும். ஆனால் விடுவிக்கப்படவில்லை. இந்த நிதியை விடுவிக்க வேண்டும் என முதல்வர் தனது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டம் தொடங்கப்படும்போது, ஒன்றிய அரசு நிதியளிக்கும் என்று சொல்லப்பட்டது. இத்திட்டத்திற்கு ரூ.63 ஆயிரம் கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த நிதியை தர ஒன்றிய அரசு மறுத்துள்ளது.

இதையும், வழங்கவேண்டும் என முதல்வர் நேரில் அழுத்தம் கொடுத்துள்ளார். ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டதுபோல் நிதியை விரைவாக ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். மூன்றாவதாக, தமிழ்நாடு மீனவர்கள் சந்திக்கும் வாழ்வாதார பிரச்னை குறித்தும், அதற்கு ஒன்றிய அரசு தீர்வு காண வேண்டியது குறித்தும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மூன்று கோரிக்கைகளை முதல்வர் நேரில் வலியுறுத்திவிட்டு, திரும்பியுள்ளார். அரசியலில் என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும், மாநில உரிமை, மக்கள் நலன் என வரும்போது அதை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் தமிழ்நாடு முதல்வர் தெளிவாக இருக்கிறார்.

இதில், அரசியல் நாகரிகத்தை அடிபிசகாமல் கடைபிடித்து வருகிறார். அதாவது, மாநில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவேண்டியது ஒன்றிய அரசின் கடமை. அதை, கேட்கவேண்டியது எனது உரிமை. அரசியலை பொறுத்தவரை எதிர் எதிர் துருவமாக இருந்தாலும், கேட்க வேண்டிய நபரிடம், நேரிலேயே கேட்டுவிட்டு வந்துவிடுவதே சிறப்பு என செய்து காட்டியுள்ளார். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்பது முதல்வரின் கனவாக உள்ளது. நிதி சிக்கல் தீர்ந்தால் மட்டுமே, நிலுவையில் உள்ள திட்டப்பணிகள் நிறைவேறும்.

அதன் அடிப்படையிலேயே, இந்த சந்திப்பு நடந்துள்ளது. ‘‘தமிழ்நாட்டு மக்கள் நலன் காக்க தேவையான இந்த 3 கோரிக்கைகளை பிரதமர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். இந்த சந்திப்பு மன நிறைவு தருகிறது. இந்த சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில்தான் உள்ளது’’ என்று தனது பேட்டியில் கூறியுள்ளார். எதிரணியில் இருப்பவர் பிரதமராக இருப்பதால், அவரை சந்திக்க வேண்டிய அவசியமில்லை, அவரிடம் கோரிக்கை மனு அளிக்க வேண்டிய தேவையும் இல்லை என இதற்கு முன்பிருந்த சில முதல்வர்கள்போல் அல்லாமல், முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது தெளிவான பாதையை அரசியல் உலகிற்கு காட்டியுள்ளார். இதே மனப்பான்மையுடன், தேச ஒருமைப்பாடு, மாநில வளர்ச்சி என்பதை கருத்தில்கொண்டு, பிரதமரும் செயல்பட்டால் ஜனநாயக மாண்பு காக்கப்படும்.

The post முக்கிய சந்திப்பு appeared first on Dinakaran.

Read Entire Article