மின்சார ரெயில் ரத்து எதிரொலி.. பஸ்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

4 days ago 7

சென்னை,

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று இரவு வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்த நிலையில், பல்லாவரம்- கடற்கரை இடையே ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் இன்று சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரையில் மட்டுமே மின்சார ரெயில்கள் பெரிதும் இடைவெளிவிட்டே இயக்கப்பட்டன. இதனால் குரோம்பேட்டை, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் ஆகிய 3 ரெயில் நிலையங்களுக்கும் மின்சார ரெயில் சேவை முற்றிலும் தடைபட்டுள்ளது.

முகூர்த்த நாளான இன்று பொதுமக்கள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு ரெயில் பயணத்தையே பெரிதும் நம்பியிருந்தனர். ஆனால் மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்ததால் திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்றவர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தனர். மணிக்கணக்கில் காத்திருந்தே மின்சார ரெயில்களில் பயணம் செய்ய நேரிட்டது.

மின்சார ரெயில்கள் ரத்து செய்யப் பட்டதையடுத்து கூடுதல் பஸ் சேவைகளும் இயக்கப்பட்டன. பஸ்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. மெட்ரோ ரெயில்களிலும் மக்கள் இன்று அதிக அளவில் பயணம் மேற்கொண்டனர். இதன் காரணமாக மெட்ரோ ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, "இது போன்ற முகூர்த்த நாட்களை எல்லாம் கணக்கில் கொண்டு இனி வரும் காலங்களில் அதிகாரிகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அதிக அளவில் விடுமுறை நாட்களில் ரெயில்களை பயன்படுத்துவதாக இருந்தால் அன்றைய தினம் பராமரிப்பு பணிகளை தள்ளி வைத்துவிட்டு வேறு ஒரு நாளில் அந்த பணிகளை செய்ய வேண்டும்" என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். 

Read Entire Article