சென்னை: மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவிவரும் நிலையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர் என மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்ட நிலையில் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்றும், இது 30.11.2024 அன்று பிற்பகல் காரைக்கால் மற்றும் மகாபலிபுரத்திற்கு இடையே மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் காற்றின் வேகத்துடன் கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்குமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று (29.11.2024) காலை மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வருகை புரிந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
ரெட் அலர்ட்
இன்று (29.11.2024) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாருர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 20 செ.மீட்டருக்கு மேலாக அதி கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 10 செ.மீட்டருக்கு மேலாக மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (29.11.2024) காலை 8.30 மணி வரை சராசரியாக சென்னை 2.7 செ.மீ., செங்கல்பட்டு 0.76 செ.மீ., மயிலாடுதுறை 0.71 செ.மீ., திருவள்ளூர் 0.64 செ.மீ., நாகப்பட்டினம் 0.40 செ.மீ., திருவாரூர் 0.3 செ.மீ., காஞ்சிபுரம் 0.16 செ.மீ., தஞ்சாவூர் 0.09 செ.மீ., கடலூர் 0.06 செ.மீ. உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக, சென்னை – சாத்தாங்காடு 6.1 செ.மீ., எர்ணாவூர் 5.8 செ.மீ., செங்கல்பட்டு – பல்லாவரம் 2.92 செ.மீ., செம்மஞ்சேரி 2.4 செ.மீ. திருவள்ளூர் – திருப்பாலைவனம் 2.56 செ.மீ., திருவெள்ளைவாயில் 2.56 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
நிவாரண முகாம்கள்
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2229 நிவாரண மைய கட்டடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தற்போது திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 6 நிவாரண முகாம்களில், 164 குடும்பங்களைச் சேர்ந்த 471 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு உபகரணங்கள்
வ. எண். மாவட்டம் JCB படகுகள் ஜெனரேட்டர்கள் மர அறுப்பான்கள் மோட்டார் பம்புகள்
1 நாகப்பட்டினம் 125 75 250 281 31
2 மயிலாடுதுறை 85 70 164 57 34
3 திருவாரூர் 125 18 142 73 18
4 தஞ்சாவூர் 59 29 69 711 42
5 கடலூர் 242 51 28 104 58
6 சென்னை 96 120 130 118 1686
7 செங்கல்பட்டு 102 116 83 245 114
8 திருவள்ளூர் 83 317 81 154 206
9 காஞ்சிபுரம் 276 10 30 43 250
மொத்தம் 1193 806 977 1786 2439
மீட்புப் படை
முதலமைச்சர் உத்தரவின்படி ஏற்கனவே நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்று (29.11.2024) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் 1 குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்களும், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா 1 குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள்
மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க மீன்வளத் துறை இயக்குநருக்கும், கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கும் 23.11.2024 அன்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற 4153 படகுகள் கரை திரும்பியுள்ளன.
கண்காணிப்பு அலுவலர்கள்
*தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
*இதுமட்டுமின்றி, இன்று (29.11.2024) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
*இந்த ஆய்வின் போது, கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குநர் வ. மோகனச்சந்திரன், இ.ஆ.ப. உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் ஆய்வு..!! appeared first on Dinakaran.