மாணவர்கள் போராட்டம்: மணிப்பூருக்கு விரையும் 2,000 சி.ஆர்.பி.எப். வீரர்கள்

1 week ago 10

இம்பால்,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் குகி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் 3-ந்தேதி கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பெண்கள் பலர் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகினர். கலவரத்தை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இருப்பினும் 16 மாதங்களுக்கு மேலாகியும் மணிப்பூரில் கலவரம் இன்னும் ஓயவில்லை.

இந்த சூழலில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தும் புதிய யுக்தியை வன்முறையாளர்கள் கையில் எடுத்துள்ளனர். இந்த தாக்குதல்களில் 8 பேர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் படுகாயம் அடைந்தனர். டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாநிலத்தில் உடனடியாக அமைதியை மீட்டெடுக்க கோரியும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி மாணவர்கள், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களின் போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக மேற்கு இம்பால், தெற்கு இம்பால் மற்றும் தவுபால் ஆகிய 3 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மணிப்பூரில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த தெலுங்கானா, ஜார்கண்ட்டில் இருந்து 2,000 சி.ஆர்.பி.எப். வீரர்களை சுரச்சந்த்பூர் மற்றும் இம்பாலுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. டிரோன்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகள், டிரோன், ஆளில்லா வான்வழி இயந்திரங்களை செயல்படவிடாமல் தடுக்கும் நவீன தொழில்நுட்ப கருவிகளும் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

Read Entire Article