மலராத கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் காமெடிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

5 hours ago 5

‘‘மின் இணைப்பு கேட்டுப்போனா இன்று போய் நாளைவான்னு அலைக்கழிக்கப்படுகிறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்தில, ஒடுக்கமான ஊரை சுற்றியும் ஏராளமான கிராமங்கள் இருக்கு.. இங்குள்ள விவசாயிகள் பெரும் அளவில் வாழை, நெல், கொய்யா போன்றவை பயிர் செய்து வர்றாங்க.. அதோட ஏராளமான குடியிருப்புகள், கடைகள், சந்தைன்னு எல்லா வசதியும் இருக்குது.. இந்த ஏரியாவுல மின் இணைப்பு வழங்க கசப்பான குப்பம் ஊராட்சியில துணை மின் நிலையம் அமைக்கப்பட்டிருக்குது..

இங்க மின் இணைப்பு வாங்குறதுக்கு ஜனங்க போராட வேண்டியிருக்குதாம்.. வயல் வெளிகள்ல தாழ்வாக போற மின் கம்பிகள், பழுதான மின் கம்பங்கள்னு எந்த புகார் சொன்னாலும் காதுல வாங்குறதே இல்லையாம்.. மின் இணைப்பு வாங்குறதுக்கு ஜனங்க போனா இன்று போய் நாளைவான்னு அலைக்கழிக்குறாங்களாம்.. அதுமட்டுமில்லாம, குடியிருப்பு பகுதிகள்ல டிரான்ஸ்பார்மர் ரிப்பேர் பார்க்க வந்தா, கண்டிப்பாக வைட்டமின் ப கொடுத்தே ஆக வேண்டுமாம்.. இல்லைன்னா கடைசி வரைக்கு அது சரியாகாதாம்..

இப்படி ஜனங்களை புலம்பவிடும் மின்வாரிய அலுவலர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கணும்னு பாதிக்கப்பட்டவங்களோட கோரிக்கை குரலாக ஒலிச்சிக்கிட்டு இருக்கு..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அணையில பிடிக்கப்படும் மீன் மட்டுமல்லாம, மீன்குஞ்சுகள் விற்பனையிலும் மெகா முறைகேடு நடக்கிறதா பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய அணையில் பல மாதங்களுக்கு முன்பு மீன்குஞ்சுகள் விடப்பட்டு தற்போது மீன்கள் பிடித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறதாம்.. முன்பெல்லாம் மீன் விற்பனை பொதுஏலம் விடப்பட்டுருக்கு..

தற்போது மீன்வளத்துறையினரே நேரடியாக மீன்களை பிடித்து விற்பனையில் ஈடுபட்டு வர்றாங்களாம்.. அணையில் பிடிக்கப்படும் மீன்களை தினமும் விற்பனையாகும் பணத்தை அரசு வங்கி கணக்கில் செலுத்த வேண்டுமாம்.. ஆனால் தினசரி 20, 35 ஆயிரத்திற்கு மீன்களை விற்பனை செய்துவிட்டு வெறும் 5 ஆயிரத்திற்கும் குறைவான மீன்கள்தான் விற்பனை செய்யப்பட்டதாக அதற்குண்டான தொகையை அரசுக்கு செலுத்தி விடுகிறார்களாம்.. மீன்வளத்துறை ஆய்வாளர் இந்த விற்பனை பணத்தை சுருட்டி வருவதுதான் பரபரப்பாக பேசப்பட்டு வருது.. அதுமட்டுமா மீன்குஞ்சுகள் விற்பனையிலும் மெகா முறைகேடு நடப்பதாகவும் புகார் எழுந்திருக்கு..

எப்படியெல்லாம் அரசு பணத்தை சுருட்டுகிறாங்கன்னு பொதுமக்கள் கேள்வி எழுப்புறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாம்பழ நகரில் தனக்கென கோஷ்டி கொண்டுவர திட்டம் போட்டிருப்பதா கிடைச்ச தகவலால் முட்டை மாவட்ட தலைவர் மீது மலராத கட்சி நிர்வாகிங்க கொந்தளிப்பா இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மலராத கட்சியின் மாங்கனி நகரில் பிரதமரின் பர்த்டே விழாவை டிரஸ்ட் ஒன்றின் தலைவர் கொண்டாடினாராம்.. அக்கட்சியில் விவசாய பிரிவில் இருந்த அவரது நடவடிக்கை சரியில்லையென கட்சிக்கு புகார் வந்திச்சாம்..

இதுதொடர்பா விசாரணை நடத்திக்கிட்டிருந்த நேரத்துல அவரே தானாக முன்வந்து கட்சியிலிருந்து ராஜினாமா செஞ்சிட்டு போயிட்டாராம்.. இந்தநிலையில்தான் திடீரென பிரதமரின் பர்த்டே விழா நடத்தி நலத்திட்ட உதவி செய்ய ஏற்பாடு செஞ்சிருக்காரு.. இதன் மூலம் மீண்டும் கட்சிக்குள்ளாற நுழைந்திடுவது மட்டுமல்லாமல் தேர்தல் களத்திலும் குதிக்க வேண்டும் என்பதுதான் அவரது பெரும் திட்டமாம்.. இந்த விழாவுக்கு முட்டை மாவட்டத்தை சேர்ந்த மாநில துணைத்தலைவர் கலந்துக்கப்போறதா மாநகர நிர்வாகிகளுக்கு தகவல் கிடைச்சிருக்கு..

இதனால ஷாக்கான அவர்கள், யாரும் விழாவில் கலந்துக்க கூடாதுன்னு முடிவு செஞ்சிருக்காங்க.. இதுகுறித்து துணை தலைவருக்கும் சொல்லியிருக்காங்க.. ஆனால் அவரோ மாநகர நிர்வாகிகளின் பேச்சை சட்டை செய்யலையாம்.. என்னை அழைத்திருக்கிறார், நான் செல்வேன்னு தடாலடியாக சொல்லிட்டாராம்.. இதற்கொரு காரணமும் இருக்காம்.. முட்டை மாவட்டத்தில் அவரால் அரசியல் செய்ய முடியலையாம்.. இதனால மாநில பொறுப்பை வச்சிக்கிட்டு, மாம்பழ நகரில் தனக்கென ஒரு கோஷ்டியை கொண்டுவர திட்டம் போட்டிருப்பதா கட்சிக்காரங்க பேசுறாங்க..

தன் பேச்சை கேட்போரை கைக்குள்ளாற வச்சிக்கிட்டு, மாம்பழ நகரில் அரசியலில் குதிக்கும் திட்டமாம்.. கட்சியில் இருந்து விலகிச் சென்றவர் நடத்திய விழாவில் கலந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், மாநகர நிர்வாகிகளை மதிக்காமல் அவமானப்படுத்திவிட்டதாக மாநகர நிர்வாகிகள் கொந்தளிப்பின் உச்சத்தில் இருப்பதோடு புகார்களை மேலிடத்திற்கும் தட்டி விட்டிருக்காங்களாம்.. அதே நேரத்தில் அந்த பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் முறையா கிடைக்கலை என்பதுதான் அம்மக்களின் ஒரே புலம்பலா இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மலராத கட்சியின் மிஸ்டு கால் பார்முலா மூலம் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் காமெடிகள்பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாநிலம் முழுவதும் மலராத கட்சிக்காரங்க உறுப்பினர் சேர்க்கை நடத்திக்கிட்டு இருக்காங்க.. வழக்கம்போல மிஸ்டு கால் பார்முலா மூலம் புது உறுப்பினர் சேர்க்கை நடக்குது.. ஏற்கனவே உறுப்பினராக இருக்கிறவங்க உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கணும்.. இந்த வேலையை செய்வதற்கும், புதுசா கட்சியில சேர்வதை கண்காணிக்கிறதுக்கும் பூத் வாரியா பொறுப்பாளர்கள் நியமிச்சிருக்காங்களாம்..

இதற்காக மஞ்சள் நகரில் ஒரு பூத்திற்கு போன மாசம் இறந்துபோன ஒருவரை பொறுப்பாளரா போட்டு எல்லாருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்காங்களாம்.. அதுவும், 3 பூத்துக்கு அவர்தான் பொறுப்பாளராம்.. இறந்து போனவரின் பணிகளை கண்காணிக்கிறதுக்கு மாவட்ட அளவில் பொறுப்பு வகிக்கும் ஒருவரையும் நியமிச்சிருக்காங்களாம்.. இதோடு முடிஞ்சு போச்சுன்னு பார்த்தா…

அடுத்த அதிர்ச்சியா ஏற்கனவே மலராத கட்சியில் இருந்து இனி எப்பவுமே மலராதுன்னு தெரிந்து உஷாரானவர், நடிகர் புதுசா தொடங்கி இருக்கிற கட்சியில் போய் இணைஞ்சிட்டாராம்.. அந்த நபரையும் உறுப்பினர் சேர்க்கை பூத் கமிட்டி பொறுப்பாளராக நியமிச்சிருக்காங்களாம்.. உறுப்பினர் சேர்க்கைங்கிற பெயர்..ல மலராத கட்சியில இப்படி ஏகப்பட்ட காமெடிகள் நடந்துகிட்டு இருக்கிறதாம்.. அடி தூள்.., கலக்குறாங்க… போங்க…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post மலராத கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் காமெடிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article