மும்பை,
மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து கோண்டியா நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். கோண்டியா மாவட்டத்தில் உள்ள கோண்டியா-அர்ஜுனி சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பஸ்சில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் உதவியுடன் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் அறிவித்துள்ளார்.