மத்தியில் இந்தியா கூட்டணி விரைவில் ஆட்சியமைக்கும்: சித்தராமையா கணிப்பு

1 day ago 2

பெங்களூரு:

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களவை தேர்தலில் பின்னடைவை சந்தித்ததால் பா.ஜ.க. தலைவர்கள் இப்போது எங்கள் தலைவர் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுகின்றனர். இந்த தேர்தலில் நாங்கள் 100 தொகுதிகளை நெருங்கிவிட்டோம். விரைவில் மத்தியில் ஆட்சியமைப்போம். நரேந்திர மோடி 5 ஆண்டுகளை நிறைவு செய்ய மாட்டார். எதிர்காலம் குறித்த கணிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் மத்தியில் உள்ள அரசியல் சூழ்நிலைகளின் அடிப்படையில் நான் இதை சொல்கிறேன்.

ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவால் பிரதமர் பதவியில் மோடி நீடிக்கிறார். அவர்கள் எந்த நேரத்திலும் ஆதரவை திரும்ப பெறலாம். அதன்பின்னர் என்ன நடக்கும்? எங்களுக்கு கிடைத்த தகவல்கள் மற்றும் அரசியல் முன்னேற்றங்களை வைத்து பார்க்கையில், இந்த அரசு (மத்திய அரசு) தனது முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்யும் என நான் நினைக்கவில்லை.

கடந்த சில தினங்களாக ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜ.க. தலைவர்கள் கடுமையாக தாக்கி பேசுகின்றனர். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, அவரது செல்வாக்கை சீர்குலைக்கும் நோக்கத்துடன் அவரை குறிவைக்கின்றனர். இந்த மிரட்டல் உருட்டல்களால் ராகுல் காந்தியை பணிய வைக்க முடியாது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Read Entire Article