மணப்பாறையில் சர்ச்சையை தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்ட தனியார் பள்ளி

3 months ago 15

திருச்சி,

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அந்த பள்ளியின் தாளாளாரின் கணவர் வசந்தகுமார் பாலியில் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவி நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். இதனைதொடர்ந்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து வசந்தகுமாரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பள்ளி தாளாளர், அவரது கணவர் உள்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி நேற்று மணப்பாறை அனைத்து மகளிர் போலீசில் சரணடைந்தார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வசந்தகுமார், மாராட்சி, சுதா, செழியன் மற்றும் ஜெயலட்சுமி ஆகிய 5 பேரும் திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவத்சன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாராட்சி, சுதா, செழியன் மற்றும் ஜெயலட்சுமி ஆகிய 4 பேருக்கு பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கினார்.

அதே சமயம், இந்த வழக்கின் முதல் குற்றவாளியான வசந்தக்குமாருக்கு வரும் 21-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், மாணவி பாலியல் சீண்டல் சர்ச்சையை தொடர்ந்து மூடப்பட்ட தனியார் பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டது. குழந்தைகளின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு என பள்ளி வளாகத்தில் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பெற்றோரிடம் மாவட்ட கல்வி அலுவலர், காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பிரச்சினை சுமுகமாக முடிவடைந்தது.

Read Entire Article