மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு முதல் அரசியல் களத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. 2019 சட்டமன்றத் தேர்தலில் பிளவுபடாத சிவசேனா, பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது முதல்வர் பதவி யாருக்கு என்பதில் ஏற்பட்ட பிரச்னையால், பாஜவுடனான நீண்டகால கூட்டணியை முறித்துக் கொண்டார் உத்தவ் தாக்கரே. பின்னர் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் ஆட்சி அமைத்தார். 2022ல் அந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே, பாஜவுடன் கூட்டணி அமைத்து புதிய ஆட்சியை அமைத்தார். அதன் பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பிளவுபட்டது. அஜித்பவார் தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று பாஜ – சிவசேனா கூட்டணியில் சேர்ந்தார். பெரும்பான்மை அடிப்படையில் உண்மையான சிவசேனா கட்சி ஷிண்டேவிடமும், தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித்பவாரிடமும் வந்தது.
இதையடுத்து உத்தவ் தாக்கரே, உத்தவ் சிவசேனா என்ற பெயரிலும், சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரபவார் என்ற பெயரிலும் புதிய கட்சியை பதிவு செய்தனர். அவர்கள் காங்கிரசுடன் சேர்ந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் தொடர்ந்தனர். கடந்த மே மாதம் நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் இடம் பெற்ற மகாவிகாஸ் அகாடி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிக்கு 30 தொகுதிகள் கிடைத்தன. ஒன்றில் சுயேட்சை வெற்றி பெற்றார். வெறும் 17 தொகுதிகள் மட்டுமே கிடைத்ததால் பா.ஜ முகாம் மட்டுமல்ல, அஜித்பவார், ஷிண்டே முகாம்களும் கதிகலங்கி விட்டன.
அடுத்த 6 மாதத்தில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய பயம் அவர்களுக்கு. இந்த சூழலில் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் பாஜ, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகாயுதி கூட்டணியில் போட்டியிட்டன. அதனை எதிர்த்து காங்கிரஸ், உத்தவ் சிவசேனா மற்றும் சரத்பவார் கட்சிகள் களமிறங்கின. சட்டப்பேரவை தேர்தலுக்கு மக்களை ஈர்க்கும் விதமாக கவர்ச்சிகரமான பல திட்டங்களை பா.ஜ கூட்டணி அறிவித்தது. அதில் மகளிருக்கு ரூ.1,500 உதவித் தொகை வழங்கும் லட்கி பகின் திட்டமும் ஒன்று.
இந்த திட்டம் பெண்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்ற நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உதவித் தொகையை ரூ.2,100 ஆக உயர்த்துவதாக மகாயுதி கூட்டணி வாக்குறுதி அளித்தது. இது போன்ற திட்டங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டது. அதே வேளையில், மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 உதவித்தொகை தருவதாக வாக்குறுதி அளித்து பிரசாரம் மேற்கொண்டன.
இந்நிலையில் கடந்த 20ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவாக 65 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. ஆளும் பா.ஜ கூட்டணி வெல்லுமா? அல்லது எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வெல்லுமா என பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பா.ஜ தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கே சாதகமாக இருந்தன. ஆளும் கூட்டணி 180 இடங்கள் வரை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. அந்த கணிப்புகள் உண்மையாகிவிட்டது. மொத்தம் உள்ள 288 இடங்களில் பா.ஜ கூட்டணி 236 இடங்களை பிடித்துள்ளது. காங்கிரஸ் இடம் பெற்ற இந்தியா கூட்டணிக்கு 48 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. மக்களவை தேர்தல் முடிந்து 6 மாதத்தில் இவ்வளவு பெரிய வெற்றியை பா.ஜ கூட்டணி பெறுவதற்கு அப்படி என்ன மிகப்பெரிய மாற்றம் நடந்து விட்டது என்பது தெரியாமல் அதிர்ச்சியில் ஆழ்துள்ளனர் இந்தியா கூட்டணியினர்.
* முக்கிய காரணங்கள்
1. மக்களவை தேர்தல் வெற்றியோடு மகாராஷ்டிரா தேர்தலுக்கு தயாரானார் உத்தவ் தாக்கரே. இதற்காக டெல்லிக்கு சென்று சோனியா, ராகுலை சந்தித்தும் கூட்டணியில் தொகுதி பங்கீடு கடைசி நேரம் வரை முடியவில்லை.
2. காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, சரத்பவார் ஆகியோர் கூடுதல் தொகுதியில் போட்டியிட பிடிவாதம் பிடித்தனர். இதனால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
3. முதல்வர் பதவிக்காகத்தான் பா.ஜ கூட்டணியை விட்டு உத்தவ் தாக்கரே வந்தார். அவரை முதல்வராக அறிவிக்க காங்கிரஸ் தயங்கியது. மேலும் அடுத்த முதல்வர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தான் என்ற கோஷமும் கூட்டணிக்கு வேட்டு வைத்து விட்டது.
4. ஆனால் பா.ஜ கூட்டணி மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு சுதாரித்து, விட்டுக்கொடுத்து உறுதியாக வேலை பார்த்ததால் வெற்றி பெற்றது.
* பா.ஜ மட்டும் தனியாக 133 இடங்களில் வெற்றி முதல்வர் பதவி யாருக்கு? ஷிண்டேவுக்கு விட்டுக்கொடுப்பாரா பட்நவிஸ்; அஜித்பவாருக்கும் ஆசை இருப்பதால் குழப்பம்
மகாராஷ்டிராவில் பா.ஜ கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் முதல்வர் பதவி யாருக்கு என்ற குழப்பம் எழுந்துள்ளது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மைக்கு 144 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ மட்டுமே 133 இடங்கள் பெற்றுள்ளது. அதனால் இந்த முறை மீண்டும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியை பா.ஜ விட்டுக்கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அஜித்பவாரும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது தெரிய வந்துள்ளது. பட்நவிஸ் தேர்வு செய்யப்படாமல் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை கோரும் பட்சத்தில், அஜித்பவாரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் தேர்தல் முடிவு வெளியாகும் போதே, மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்ற சர்ச்சையும் வெடித்தது. இதையடுத்து பா.ஜ கூட்டணி தலைவர்கள் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே: ஆளும் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி, வரலாற்றுச் சிறப்பு மிக்கது. மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சிவசேனாவும் யாரிடம் இருக்க வேண்டும் என்பதையும் மக்கள் இதன்மூலம் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். எந்த வித சிக்கலும் இல்லாமல் சுமூகமான முறையில்மகாயுதி கூட்டணி அரசு அமையும். மகாயுதியில் உள்ள மூன்று கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டில் இணக்கமான முடிவை எடுத்தன. இதேபோல, அரசு அமைப்பதிலும் எந்த முட்டுக்கட்டையும் இருக்காது.
துணைமுதல்வர் தேவேந்திர பட்நவிஸ்: முதல்வர் யார் என்பதை மகாயுதி கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்று கூடி பேசி முடிவு எடுப்பார்கள். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு, எங்கள் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் அனைவரும் மும்பைக்கு வருவார்கள். அவர்களும் சேர்ந்து தலைமையை தேர்வு செய்வார்கள். ஒரு சிலரை திருப்திப்படுத்தும் எதிர்க்கட்சியினரின் அரசியல் நிலைப்பாட்டை மக்கள் புறக்கணித்துள்ளனர். மேலும், ‘ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம்’ என்ற பிரதமரின் கோரிக்கைக்கு இந்த வெற்றியை பதிலாக அளித்துள்ளனர்.
துணை முதல்வர் அஜித்பவார்: மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு,நடவடிக்கைகளில் மாற்றம் செய்துள்ளோம். இதற்கு முன் இப்படியொரு வெற்றியை யாருமே பெற்றதில்லை. மாநில மேம்பாட்டுப் பணிகளுக்காக மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்களுக்கும், இந்த வெற்றிக்குப் பாடுபட்ட தொண்டர்களுக்கும் நன்றி.
The post மக்களவை தேர்தலில் 48க்கு 30, சட்டப்பேரவை தேர்தலில் 288க்கு 48: மகாராஷ்டிராவில் 6 மாதத்தில் என்ன நடந்தது? இந்தியா கூட்டணியை அதிர்ச்சி அடைய வைத்த தேர்தல் முடிவுகள் appeared first on Dinakaran.