
பெங்களூரு,
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12 வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஸ்மிர்திமந்தனா, 10 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
குஜராத் அணியின் அபார பந்துவீச்சால், பெங்களூரு அணியினர் ரன் குவிக்க திணறினர். அத்துடன், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் கனிகா அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி பேட்டிங் செய்தது.
தொடக்கத்தில் பெத் மூனி 17 ரன்களும் , தயாளன் ஹேமலதா 11 ரன்களும் , ஹர்லீன் தியோல் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர் .
தொடர்ந்து ஆஷ்லே கார்ட்னர், போப் லிட்ச்பீல்ட் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் . அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்த ஆஷ்லே கார்ட்னர் அரைசதம் அடித்தார் . இறுதியில் 16.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு குஜராத் அணி 126 ரன்கள் எடுத்தது . இதனால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது . ஆஷ்லே கார்ட்னர் 58 ரன்களும், போப் லிட்ச்பீல்ட் 30 ரன்களும் எடுத்தனர்.