மகத்தான புண்ணியம் தரும் மஹாளயம்

2 days ago 5

மஹாளயபட்சம் – 18.9.2024 முதல் 02.10.2024 வரை

மஹாளயம் என்றால் என்ன?

சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாள் அமாவாசை எனப்படும். சூரியனை பிதுர்காரகன் என்றும், சந்திரனை மாதுர்காரகன் என்றும் சொல்வார்கள். ஜாதக ரீதியாக இந்த இரண்டும் பிரதானமானவை. இவர்கள் நிலையை வைத்துதான் ஒருவருடைய வாழ்க்கை நிலையைச் சொல்ல வேண்டும். சூரியனை ஆத்மகாரகன் என்றும், சந்திரனை மனோகாரகன் என்றும் சொல்வார்கள். பிறந்த ஜாதகத்தை (லக்கினம்) சூரியன் நிலை தீர்மானிக்கிறது. நடக்கும் நிகழ்வுகளை சந்திரன் (ராசி) தீர்மானிக்கிறார். இவர்கள் இணையும் நாளில் (அமாவாசை) நம் முன்னோர்களை நினைக்க வேண்டும். அமாவாசைகளில் மூன்று அமாவாசைகள் அதி முக்கியமானவை. 1. ஆடி அமாவாசை, 2 தை அமாவாசை, 3. மஹாளய அமாவாசை. ஆடி அமாவாசை, தை அமாவாசை இரண்டும் முறையே தட்சிணாயண தொடக்கத்திலும், உத்தராயண தொடக்கத்திலும் வரும் அமா வாசைகள். இந்த அமாவாசைகள் இரண்டுக்கும் நடுவே உள்ள மஹாளய அமாவாசை. முக்கியமானது. ஏதோ ஒரு காரணத்தினால் அமாவாசையை மறந்தாலும் மகாளயத்தை மறக்கவே கூடாது. அதனால்தான் மறந்தவனுக்கு மஹாளயம் என்று ஒரு பழமொழியே சொல்லியிருக்கிறார்கள்.

மஹாளயத்தின் அடிப்படை என்ன?

‘மஹாளயம்’ என்றால் `பெரிய கூட்டம் என்று பொருள்’. மஹாளயத்தின் சிறப்பிற்குக் காரணம் இருக்கிறது. ஆடி அமாவாசைக்கு பித்ருக்கள் உலகத்திலிருந்து இந்த நில உலகத்திற்கு வருகின்றார்கள். பித்ருக்கள் உலகம் என்பது உடலை விட்ட ஆன்மாக்கள் தங்களுக்கு வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இடமாகும். பித்ரு லோகம் எங்கே இருக்கிறது என்பது ஒரு கேள்வி? பூமிக்கும், அந்தரிட்சத்திற்கும் நடுவில் இருப்பதாக பாகவத புராணம் (காண்டம்5, அத்தியாயம் 24) கூறுகிறது. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக நம் வீடு தேடி வரும் காலமே மஹாளய பட்சம். “பட்சம்” என்றால் பதினைந்து நாள்கள். மறைந்த நம் முன்னோர் பித்ருலோகத்திலிருந்து இந்தப் பதினைந்து நாள்கள் நம்மோடு தங்குகிறார்கள். மகாளய பட்சம், இந்த ஆண்டு 18.9.2024 புதன் அன்று தொடங்குகிறது.

பித்ருக்கள் யார்?

தமிழிலக்கிய மரபு என்பது தமிழ் வாழ்வியல் பண்பாட்டு விழுமியங்களின் மரபு. அதில் முன்னோர்களான பிதுரர்களை, ‘‘தென்புலத்தார்” என்று அழகாக அழைக்கின்றார்கள். ஒருவன் இறந்தால் (பிறந்தவர்கள் அனைவரும் ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும்) ஆன்மாதான் உடலை விட்டுவிட்டுப் போகும். அதுவே வேறொரு உடலைத் தேடும்.

இதை திருவள்ளுவரும்,
குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு
(அதிகாரம்: நிலையாமை குறள் எண்:338)

என்ற குறளில் அழகாகச் சொல்கிறார். உடல் நிலைப்பது உயிர் உள்ள வரையில்தான்; இரண்டும் எதற்கும் கட்டுப்பட்டதுமல்ல; அவற்றின் நட்பும் நீடித்ததல்ல. உடலை நீத்த ஆன்மா முற்பிறவியில் செய்த புண்ணிய பாவ கர்ம வினைகளுக்கு ஏற்ப, நரகத்தையும், சொர்க்கத்தையும் அனுபவித்து, பாவ புண்ணியங்கள் தீர்ந்த பின்னர், பித்ரு லோகத்தில் மறு பிறவிக்கான உடல் கிடைக்கும் வரை தங்கியிருக்கும். அந்த உலகத்தில் இருப்பவர்கள் பிதுரர்கள்.

முன்னோர்களை வரவேற்பது மஹாளயம்

அவர்கள் ஆடி அமாவாசைக்கு, தான் வாழ்ந்த குடும்பத்தைத் தேடி வருவதாகவும், மஹாளய அமாவாசை காலத்தில் இங்கே இருப்பதாகவும், தை அமாவாசைக்கு பூலோகத்திலிருந்து தங்கள் பிதுர்லோகத்திற்கு திரும்ப புறப்படுவதாகவும் சொல்கிறார்கள். எனவே ஆடி அமாவாசை, தை அமாவாசை வரை உள்ள அத்தனை அமாவாசைகளும் பிதுர் வணக்கத்திற்கு உள்ள சிறப்பான நாட்களாகும். நாம் எப்படி வாழ்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவும், நம்முடைய குடும்பங்களில் உள்ள தோஷத்தை நீக்குவதற்காகவும், தங்கள் சக்தியை பயன்படுத்தி நமக்கு நல்லாசிகள் வழங்குவதற்காகவும், நம்மைத் தேடி அவர்கள் வருகிறார்கள். அப்படி அவர்கள் வருகின்ற பயணம் தட்சிணாயண காலமான ஆடி முதல் தை வரை நீடிக்கிறது. அவர்கள் நம் உலகத்தில் வந்து சேர்ந்து நம்மோடு தங்கி இருக்கக்கூடிய புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரையான 15 நாட்கள் தான் மகாளயபட்சம். இதற்கு முன் உள்ள நாட்கள் அவர்கள் வருகை நாட்கள். மகாளயத்துக்கு பின் உள்ள நாட்கள் நம்மிடமிருந்து விடைபெற்றுத் திரும்பச் செல்லும் நாட்கள். அப்படிச் செல்லும் அவர்கள் வழிக்கு வெளிச்சம் தருவதற்காகவே தீபாவளி, கார்த்திகை முதலிய நாட்களில் நாம் தீபம் ஏற்றுகிறோம் என்றும் நம்முடைய முன்னோர்கள் சொல்வார்கள்.

பிதுர்கடன்?

நம்மைப் போன்று, இல்லறத்தில் இருப்பவர்களுக்கு, நான்கு கடன்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. தேவ கடன், ரிஷி கடன், பூத கடன், பிதுர் கடன்… ஒரு இல்லறத்தான் முக்கியக் கடமையாகப் பித்ருக்களை உபசரிக்கக்கூடிய சடங்கு சொல்லப்பட்டிருக்கிறது.

தென்புலத்தார், தெய்வம், விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
(அதிகாரம்: இல்வாழ்க்கை குறள்எண்:43)

இறந்த முன்னோர், வழிபடும் தெய்வம், விருந்து, சுற்றம், தன் குடும்பம் எனப்பட்ட ஐந்திடத்தும் அறநெறி வழுவாது காத்தல் இல்லறத்தானுக்குத் தலைமையான அறம். அதனால்தான் திருவள்ளுவர் முதல் வழிபாடாகத் தென்புலத்தார் வழிபாட்டை வைத்தார். தெய்வ வழிபாட்டுக்கு சற்று குறைவு வந்தாலும், முன்னோர்கள் வழிபாட்டில் எந்தக் குறையும் இருக்கக்கூடாது. அது மிகுந்த சிரத்தையுடனும், கவனத்தோடும் செய்யப்பட வேண்டும் என்பதால்தான் அந்த வழிபாட்டுக்குச் சிரார்த்தம் என்று பெயர் வைத்தார்கள்.

எப்படிச் செய்ய வேண்டும்?

அன்றைக்கு காலையில் நீராடி பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். முன்னோர்கள் பெயரையும் கோத்ரத்தையும் சொல்லி, கோத்ரம் இல்லா விட்டால் முன்னோர் பெயரையும் உறவையும் சொல்லி தாய் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், தந்தை வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என மூன்று தலைமுறையினர்கள், பங்காளிகள் (ஞாதிகள்), முதலியோருக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதில் “யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை: குசோ தகை: த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்று ஒரு மந்திரம் வரும். தர்ப்பணம் செய்ய சந்ததி இல்லாதவர்களுக்கும் சேர்த்து எள்ளும் நீரும் இறைக்க வேண்டும்.

யார் யார் செய்ய வேண்டும்? பெண்கள் செய்யலாமா?

1. தாய் தந்தை இல்லாத ஆண்கள் அவசியம் செய்ய வேண்டும்.

2. குழந்தை இல்லாத, அதே சமயத்தில் கணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சங்ககாலத்தில் பெண்கள் செய்த நீத்தார் வழிபாடு பற்றிய பல குறிப்புகள் இருக்கின்றன.

3. திருமணம் ஆன பின், தன்னுடைய தாய் தந்தையர் மறைந்துவிட்டால், அவர்களைப் பெண் வணங்கலாம் ஆனால் அமாவாசை விரதம் இருப்பதற்கும் தர்ப்பணம் செய்வதற்கும் விதிக்கப்படவில்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

4. பெண்கள் முறையான விரதம் இல்லாமல் (தர்ப்பணம் செய்யாமல்) கோயிலுக்குச் சென்று தானம் செய்யலாம். வீட்டில் பெரியவர்களை அழைத்து அன்னமிட்டு மரியாதை செய்யலாம். பொதுவாக தில தர்ப்பணமும் சிரார்த்
தமும் ஆண் வாரிசுகள் செய்ய வேண்டும் என்றே சாஸ்திரம் சொல்கிறது.

The post மகத்தான புண்ணியம் தரும் மஹாளயம் appeared first on Dinakaran.

Read Entire Article