
புனே,
புனே சுவர்கேட்டில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பரந்து விரிந்து காணப்படும் இந்த பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த பஸ் நிலையத்துக்கு அதிகாலை வேளையில் 26 வயது இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் தனது சொந்த ஊரான சத்தாரா மாவட்டம் பால்டானுக்கு செல்ல பஸ்சுக்காக நடைமேடை ஒன்றில் காத்திருந்தார்.
தனியாக நின்ற இளம்பெண்ணை நோட்டமிட்ட ஆசாமி ஒருவன் அவரிடம் நெருங்கி வந்தான். அந்த ஆசாமி, இளம்பெண்ணை பார்த்து சகோதரி... என்று கூறி நைசாக பேச்சு கொடுத்தான். கண்டக்டர் போல நடித்து, நீங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு பஸ் இங்கு வராது என்று கூறியுள்ளான். இதையடுத்து பஸ் நிற்கும் பகுதிக்கு அழைத்து செல்வதாக கூறி, இளம்பெண்ணை அழைத்து சென்றான். பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் நின்ற மாநில அரசு போக்குவரத்து கழகத்துக்கு (எம்.எஸ்.ஆர்.டி.சி.) சொந்தமான 'சிவ்சாகி' என்ற சொகுசு பஸ்சை காட்டி, இது தான் நீங்கள் போக வேண்டிய ஊருக்கு செல்லும் பஸ் என்று கூறியுள்ளான்.
இதை நம்பி அந்த அந்த இளம்பெண் ஏறியபோது, உடன் வந்த அந்த நபர் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பேருந்து வளாகத்தில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில் அந்த நபரின் பெயர் தத்தாத்ரேய ராமதாஸ் என்பதும், 36 வயதாகும் அவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரைக் கண்டுபிடிக்க போலீசார், எட்டு சிறப்பு குழுக்களை அமைத்து தேடி வருகின்றனர் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் காவல் நிலையம் இருந்துள்ளது. காவல் நிலையம் அருகிலேயே நடைபெற்ற இந்த கொடூரம் மராட்டிய மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.