
சென்னை,
நடிகைகள் அஞ்சலி, ரம்யா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'பேட் கேர்ள்'. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். அனுராஜ் ஹாசியப் தயாரித்துள்ளார். இந்த படத்தின் டீசர் கடந்த ஜனவரி 26-ந்தேதி வெளியானது.
அதில், பிராமண பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, இந்த காட்சிகளை நீக்கும் வரை படத்துக்கு தணிக்கை சான்று வழங்கக்கூடாது என்று திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில், கோவையைச் சேர்ந்த ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தின் தலைவர் ராம்நாத் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தணிக்கை வாரியம் தரப்பில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.ராஜேஷ் விவேகானந்தன் ஆஜராகி, 'பேட் கேர்ள்' படத்துக்கு தணிக்கை சான்றி கேட்டு இதுவரை யாரும் விண்ணப்பிக்கவில்லை. அதனால், இந்த மனுதாரரின் கோரிக்கையை தற்போது பரிசீலிக்க முடியாது. அதேநேரம், தணிக்கை வாரியம் மனுதாரரின் விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலிக்கும். அவ்வாறு சட்டப்படி செயல்பட தணிக்கை வாரியம் தயாராக உள்ளது'' என்று கூறினார். இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.