பேஜர்… பேஜார்…!

1 day ago 3

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் உலகில் பல நாடுகள் வளர்ச்சிப்பாதையில் செல்கின்றன. அதே நேரம் அழிவின் பாதைக்கும் தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த வகையில் லெபனானில் நடத்தப்பட்ட பேஜர் சைபர் தாக்குதல் உலக அரங்கை அதிர வைத்திருக்கிறது. 90களின் இறுதி – 2000 ஆண்டு துவக்க காலங்களில் பேஜர் பயன்பாடு உலகெங்கிலும் பரவலாகத் தொடங்கியது. தற்போது எஸ்எம்எஸ் அனுப்புவது போல, ஒரு நிறுவனம் தனது தொழிலாளர்களுக்கு எளிதாக ஒரு முக்கிய தகவலை அனுப்ப பயன்பட்டது. மருத்துவம், காவல்துறை, மார்க்கெட்டிங் துறைகளில் பணியாற்றுவோருக்கு இது மிகவும் பயன்பட்டது. செல்போன் வந்த பிறகு இதன் பயன்பாடு குறைந்தாலும், சில நாடுகளில் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் உண்டு. இதன் தகவலை அவ்வளவு எளிதாக யாரும் ஹேக் செய்ய முடியாது. முன்பு தகவல்களை படிக்க மட்டுமே முடியும். தற்போது ரிப்ளை அனுப்பலாம். வாய்ஸ் மெசேஜ் கூட அனுப்பலாம். பேட்டரி ஆயுட்காலம் அதிகம்.

ஒருமுறை போட்டால் ஒரு வாரம் கூட பயன்படுத்தலாம். செல்போன் சிக்னல் கிடைக்காத இடங்களில் கூட இதனை பயன்படுத்தலாம். செல்போன் சிக்னலை வைத்து யாரையும் எளிதில் அடையாளம் கண்டுவிட முடிகிறது என்பதால், ரகசிய உளவு அமைப்புகள் மற்றும் தீவிரவாத அமைப்புகள் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பேஜர் மூலம் லெபனானில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் மிரள வைத்திருக்கிறது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே ஓராண்டாகவே ேபார் நடந்து வருகிறது. ஹமாஸ்க்கு ஹிஸ்புல்லா அமைப்பு தொடர்ந்து ஆதரவு தருகிறது. இந்த அமைப்பினர் தங்களது தகவல் தொடர்புகளுக்கு பேஜரையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டே லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது பேஜர் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஹிஸ்புல்லா அமைப்பினர் 11 பேர் பலியாகி உள்ளனர். இவர்களோடு லெபனான் மக்கள் பயன்படுத்தி வந்த பேஜர்களும் வெடித்து சிதறியுள்ளன. இந்த சம்பவத்தில் 2,750க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் 400க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்த சைபர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளது மிகவும் கவலையளிக்கும் விஷயம்.

ஒரே நேரத்தில் சுமார் பல ஆயிரம் பேஜர்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மிக தொலைவில் இருந்து ஆபரேட் செய்து வெடிக்கச் செய்யும் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் இச்சம்பவம் நடந்துள்ளது உறுதியாகியுள்ளது. ைதவானிடம் இருந்து தாங்கள் வாங்கிய பேஜர்களில், ரிமோட் மூலம் ஆபரேட் செய்யும் வகையில் சிறிய ரக அதே நேரம் கூடுதல் திறன் கொண்ட வெடிபொருளானது பேட்டரிக்குள் வைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் உளவு அமைப்பு இந்த விஷயத்தை சாதுர்யமாக கையாண்டுள்ளது என ஹிஸ்புல்லா அமைப்பினர் கூறி வருகின்றனர். சிரியாவிலும் வெடித்து சிதறியுள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் எதிரொலியாக பல நாடுகளில் சில குறிப்பிட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதை இரு நாடுகளுக்கு இடையேயான சைபர் கிரைம் யுத்தமாக மட்டுமே பார்க்க முடியாது. இது தகவல் தொடர்பு சாதனங்கள் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி விடும். ஏற்கனவே, ஆன்லைன் மோசடி உள்ளிட்ட பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கும் சூழலில், உயிருக்கு ஆபத்தான இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மேலும் அச்சத்தையே தரும்.

The post பேஜர்… பேஜார்…! appeared first on Dinakaran.

Read Entire Article