சென்னை: பெருங்களத்தூரில் 1,453 வீடுகள் கட்ட சிஎம்டிஏ அனுமதி வழங்க ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் மூலம் 36 போலி ஸ்கிராப் விற்பனையாளர்கள் மூலம அதிமுக மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் ரூ.27.90 கோடி தனது மகன் நடத்தும் நிறுவனம் மூலம் லஞ்சம் பெற்றது தொடர்பாக கூடுதல் ஆதாரங்களை, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அமலாக்கத்துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தெலுகன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவர் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 2011-2016ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதி துறை, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் கூடுதலாக விவசாயத்துறை அமைச்சராக வைத்திலிங்கம் இருந்தார்.
அப்போது சென்னை அருகே பெருங்களத்தூர் பகுதியில் ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் 57.94 ஏக்கரில் 1,453 வீடுகள் கட்ட முடிவு செய்தது. இதற்காக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கினார். இதற்காக ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் தங்களிடம் ஸ்கிராப் பெற்றும் 36 ஸ்கிராப் விற்பனையாளர்கள் மூலம் வைத்திலிங்கத்தின் மகன்களுக்குச் சொந்தமான முத்தம்மாள் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பாரத் கோல் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு கடந்த 2016ம் ஆண்டு ரூ.27.90 கோடி பணம் கடனாக வழங்கியது போல் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக எழுந்த புகாரின் படி லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2024ம் ஆண்டு மாஜி அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்களுக்கு சொந்தமான வீடு நிறுவனங்கள், லஞ்ச பணம் கொடுத்த ஸ்ரீராம் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.27.90 கோடி லஞ்சம் பணம் பெற்றது தொடர்பாக முக்கிய ஆவணங்கள் சிக்கியது. அதேநேரம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையின் படி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் 36 ஸ்கிராப் விற்பனையாளர்கள் வைத்திலிங்கம் மகன்கள் நடத்தும் முத்தம்மாள் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பாரத் கோல் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு நிலங்கள் வாங்க முன்பணமாக கொடுத்தது தெரியவந்தது. ஆனால் வைத்திலிங்கம் மகன்கள் நடத்தும் நிறுவனங்கள் 2024ம் ஆண்டு வரை எந்த நிலங்களும் வாங்க வில்லை. அதேநேரம் கடனாக பெற்றதாக கூறிய ரூ.27.90 கோடி பணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் திருப்பி தரவில்லை.
அதேநேரம் 1,453 வீடுகள் கட்ட ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்திற்கு சிஎம்டிஏ அனுமதி பெற அப்போதைய அமைச்சர் வைத்திலிங்கம் தனது மகன்கள் நடத்தும் நிறுவனங்கள் மூலம் போலியான 36 ஸ்கிராப் விற்பனையாளர்கள் உதவியுடன் ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றது உறுதியானது. அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை மாஜி அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுத்தது. இருந்தாலும் இந்த வழக்கில் ரூ.27.90 கோடி பணம் வழங்கிய 36 ஸ்கிராப் விற்பனையாளர்கள் யார் என்பது குறித்து இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் லஞ்ச பணத்தை பெற போலியாக உருவாக்கப்பட்ட 36 ஸ்கிராப் விற்பனையாளர்கள் மூலம் பணம் பெற்றது ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
எனவே சிஎம்டிஏ அனுமதி வழங்க சட்டவிரோதமாக 36 போலியான விற்பனையாளர்கள் நிறுவனம் மூலம் ரூ.27.90 கோடி பணம் பெற்றது தெரியவந்துள்ளது. எனவே மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் ஊழல் வழக்கு தொடர்பாக கூடுதல் ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பியுள்ளது. இதனால் லஞ்ச ஒழிப்புத்தறைக்கு அமலாக்கத்துறை அளித்த ஆதாரங்களின் படி மீண்டும் மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் நடத்து நிறுவனங்கள் மீது மீண்டும் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் என்றும், இந்த வழக்கில் மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் கைது செய்ய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post பெருங்களத்தூரில் 1,453 வீடுகள் கட்ட சிஎம்டிஏ அனுமதி வழங்க அதிமுக மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் 36 போலி நிறுவனங்கள் மூலம் ரூ.27.90 கோடி லஞ்சம் வாங்கினார்: கூடுதல் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பியது அமலாக்கத்துறை appeared first on Dinakaran.