பெண்கள் பலர் உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறார்கள்.ஆனால் உடல் எடைக்கும், தூக்கத்துக்கும் சம்பந்தம் உண்டு. அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை ஆகியவற்றுக்கும் உடல் எடைக்கும் இடையே உள்ள தொடர்பை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.சரியான நேரத்தில் தூங்காமல், இரவில் அதிகளவு எலக்ட்ரானிக் பொருட்களில் வேலை செய்வதும், கணினி மற்றும் மொபைல் போனை அதிகமாக பார்ப்
பதும், நல்ல உறக்கத்திற்கு வழி செய்யாத காரணத்தால் உடல் பருமன் பிரச்னை அதிகரித்து வருகிறது.இரவில் சராசரியாக ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தூங்குவது எடையின் எதிர் மறை மாற்றங்களை ஏற்படுத்தாது. அதே சமயம் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் தூங்குவதும் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். எனவே பெண்கள் மற்றும் ஆண்கள் அதிகாலையில் எழுவது மிகவும் சிறப்பானது. இதன் மூலம் அவர்களின் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.அது போல ஹார்மோன்களின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்வதற்கு தூக்கம் முக்கியமான ஒன்றாகும். தூக்கம் சரியான வழியில் கிடைக்காவிட்டால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து எடை கூடுவதற்கும் குறைவதற்கும் அதிகமான வாய்ப்புகள் உள்ளது.
சராசரியாக 7, 8 மணி நேரம் தூங்கினால் அதிக எடை மற்றும் உடல் பருமனைத் தடுக்கலாம் என சில ஆய்வு தெரிவிக்கிறது. பெண்கள் மதிய நேரம் உறங்குவதை தவிர்ப்பது நல்லது.புரதம் நிறைந்த உணவுகளில் இருக்கும் செரோடோனின் மூளைக்கு தூக்கத்தை உருவாக்கும். எனவே மதிய உணவில் சோயா, முட்டை, மீன், இறைச்சி, வாழைப்பழம் போன்றவற்றை குறைவாக சாப்பிடலாம். இதன் மூலம் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்க முடியும். மேலும் நார்ச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள இரவு உறக்கம் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும். இரவில் லேசான வயிற்றுப் பசிக்கு மட்டும் சாப்பிடும் வழக்கமும் நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். இரவு நேரத்தில் கண்விழித்து வேலை செய்யும் போது அதிக அளவு எண்ணெய் பண்டங்களை சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும். இவற்றைத் தவிர்ப்பதன் மூலம் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.
பெண்களுக்கு வேலைப் பளு அதிகமாக இருந்தாலும் சரியான நேரத்தில், சரியான அளவு தூங்குவது முக்கியமானது என்பதை உணர்ந்து செயல்பட்டால், உடல் பருமன் மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றை தவிர்க்கலாம்.வேலைகளை விரைவாக முடித்து விட்டு இரவு 9 மணிக்குள் தூங்கச் செல்வது நல்லது. அது போல் அதிகாலையில் சீக்கிரம் எழுந்து அன்றாட வேலைகளை தொடங்குவது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
– அ.ப. ஜெயபால்.
The post பெண்களின் எடைக்குறைப்பில் தூக்கத்தின் பங்கு appeared first on Dinakaran.