பெண்கல்விப் போராளி சாவித்ரிபாய் புலே!

1 week ago 10

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது வெறும் 5 சதவீதம் பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெற்ற நிலையில் நாடு இருந்தது. 77 ஆண்டுகளில் 77 சதவீதம் எட்டுவதற்கு பல பேரின் கடினமான உழைப்பும், விழிப்புணர்வும் பெண் கல்வியின் அவசியம் குறித்த மத்திய, மாநில அரசுகளின் பிரச்சாரமும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.

அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற நிலை மாறி இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதிப்பதற்கு சமூக விழிப்புணர்வும், சமூக மூடநம்பிக்கை ஒழிப்பும், பெண் கல்வியில் மிகப்பெரிய மாற்றமுமே முக்கியக் காரணமாக அமைந்தது.பெண்கல்விக்காகப் போராடியவர்களில் தவிர்க்க முடியாதவர் சாவித்ரிபாய் புலே என்றால் மறுப்பதற்கில்லை. இவரின் வாழ்க்கை நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் உத்வேகத்தைக் கொடுக்கும். விடா முயற்சியை,கடின உழைப்பை, தன்னம்பிக்கையை கற்றுக்கொடுக்கும்.

மகாரஷ்டிரா மாநிலத்தில் 1831 வருடம் ஜனவரி 3ம் தேதி சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அப்போதைய திருமண முறைப்படி 1840ஆம் ஆண்டு அவருடைய 9 வயதில் 4 வயது மூத்தவரான மகாத்மா ஜோதிராவ் புலே என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இவரது கணவர் ஒரு சிறந்த முற்போக்குச் சிந்தனையாளர். சாதிய ஒழிப்பு மற்றும் பெண் முன்னேற்றத்துக்காக அக்காலத்திலேயே பல செயல்பாடுகளில் ஈடுபட்டவர். பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். இவர் தன்னுடைய போராட்டங்களில் தன்னுடைய மனைவியையும் இணைத்துக்கொண்டார். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை புனே அருகே பிடெ வாடாவில் 1846ஆம் ஆண்டில் தொடங்கினர். அந்தப் பள்ளியில் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் இணைத்துக்கொண்டு தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய பெண்களுக்குக் கல்வி புகட்டினர்.

அதே சமயம் 1848 இல் வெற்றிகரமாக பல போராட்டங்களுக்குப் பின் ஆசிரியர் பயிற்சியை சாவித்ரிபாய் புலே நிறைவு செய்தார். அதே ஆண்டில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியை ஆரம்பித்து அதில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். புனேவில் இந்த பள்ளி 6 மாதங்கள் செயல்பட்டது. பின்னர் சில பிரச்சனைகள் காரணமாக இந்தப் பள்ளி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இவர் கல்விப் பணி ஆற்றுவது பல பிற்போக்குச் சிந்தனையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதன் காரணமாகப் பல இன்னல்களை தொடர்ந்து ஏற்படுத்தி வந்துள்ளனர்.

இவர் பள்ளிக்குச் செல்லும்போது பழைய புடவையை உடுத்திக் கொள்வாராம். சாலையில் நடக்கும்போது பழமைவாதிகள் இவர் மீது சேற்றை, புழுதியை வாரி இறைத்தார்கள். பள்ளிக்குச் சென்றவுடன் வேறு உடை மாற்றிக் கொள்வார். பல இன்னல்களுக்கு மத்தியிலும் சற்றும் தளராமல் அயராது உழைத்த தெய்வப் பெண்மணி. இன்று நம் நாட்டு பெண்கள் அனைத்து துறைகளிலும் வளர்ந்து ஆண்களுக்கு நிகராகச் சாதனை படைக்கிறார்கள் என்றால் பெண்கல்விக்காக அடித்தளம் இட்டுப் பாடுபட்டவர்களில் சாவித்ரி பாய் புலேவும் ஒருவராக இருந்து போராடியதே முக்கியக் காரணம்.

பெண்கல்விப் பணி மட்டுமல்லாமல் விதவைப் பெண்களின் தலையை மொட்டையடிப்பதைக் கண்டித்து நாவிதர்களைத் திரட்டி 1863ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை சாவித்திரி பாய் புலே நடத்தினார். 1870 ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால்அனாதைகளான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியை நடத்தினார். 1897 ஆம் ஆண்டு ப்ளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என ஒரு மருத்துவமனையை உருவாக்கினார். இதில் அவருக்கும் தொற்று ஏற்பட்டு 1897ஆம் வருடம் மார்ச் 10ம் தேதி இயற்கை எய்தினார்.

பெண் சமூகச் சீர்திருத்தவாதிகளைச் சிறப்பிக்கும் வகையில் மகாராஷ்டிரா அரசு சாவித்ரிபாய் புலேயின் பெயரில் ஒரு விருதை ஏற்படுத்தியது. மார்ச் 10, 1998 அன்று, இந்திய அஞ்சல்துறை சாவித்ரி பாய் புலேவின் நினைவாக ஓர் அஞ்சல் தலை வெளியிட்டது. 2015 ஆம் வருடம் முதல் புனே பல்கலைக்கழகத்தின் பெயர் சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தன் வாழ்நாள் முழுவதும் சமுதாய முன்னேற்றத்துக்காக அயராது உழைத்த ஒரு உன்னதமான
போராளி சாவித்ரிபாய் புலே.

– ஏ. பி. முருகானந்தம்

The post பெண்கல்விப் போராளி சாவித்ரிபாய் புலே! appeared first on Dinakaran.

Read Entire Article