
கவுகாத்தி,
அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில், 'அட்வான்டேஜ் அசாம் 2.0' என்ற வர்த்தக மாநாடு நடந்தது. அதில், பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் எஸ்.பூரி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
"2026-ம் ஆண்டுக்குள், பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் கலக்க இலக்கு நிர்ணயித்து இருந்தோம். ஆனால், 19.6 சதவீத கலப்பை ஏற்கனவே எட்டி விட்டோம். அடுத்த மாதம், 20 சதவீத கலப்பை எட்டி விடுவோம். எத்தனால் கலப்பை 20 சதவீதத்துக்கு மேல் உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதற்காக 'நிதி ஆயோக்' குழு ஒன்று ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. 1,700 கோடி லிட்டர் கலக்கும் அளவுக்கு இந்தியாவுக்கு திறன் உள்ளது. ஏற்கனவே 1,500 கோடி லிட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பல்வேறுவகை எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா 15 ஆயிரம் கோடி டாலர் செலவழித்து வருகிறது. அதே சமயத்தில், பசுமை ஹைட்ரஜன் மீது நாம் அவ்வளவாக கவனம் செலுத்தாமல் இருக்கிறோம்.
தற்போது, பசுமை ஹைட்ரஜன் விலை 4.5 டாலராக உள்ளது. அதை 2.5 டாலருக்கு கொண்டு வர முடிந்தால், பெரும் புரட்சியே ஏற்படும். நாம் வழக்கமான எரிபொருளுக்கு பதிலாக, பசுமை ஹைட்ரஜனுக்கு மாறி விடலாம்."
இவ்வாறு அவர் பேசினார்.