பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் எறும்பு பவுடர் தின்று கைதி தற்கொலை முயற்சி

4 hours ago 3

பூந்தமல்லி: பாஜ சார்பில் கடந்த 2011ம் ஆண்டு நடந்த ரத யாத்திரையின் ஒரு பகுதியாக மதுரைக்கு பாஜ மூத்த தலைவர் அத்வானி வந்தார். அப்போது அவர் சென்ற பகுதியில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் ஜாகீர் உசேன்(37) என்பவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், பாதுகாப்பு கருதி கடந்த 2 மாதங்களாக பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு சிறையில் இருந்த ஜாகீர் உசேன் எறும்பு பவுடரை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரை சிறைக்காவலர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து சிறைக்காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜாகீர் உசேனுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஜாமீன் கிடைத்தும் அதற்கான ஆவணங்கள் மற்றும் தொகையை சமர்ப்பிக்க முடியாததால் சிறையில் இருந்து வெளியே செல்ல முடியாத நிலை இருந்து வந்துள்ளது. இதனால் விரக்தியில் இருந்த ஜாகீர்உசேன் சிறையில் எறும்பு பவுடரை தின்று தற்கொலைக்கு முயன்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவருக்கு எறும்பு பவுடர் எப்படி கிடைத்தது என்பது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் எறும்பு பவுடர் தின்று கைதி தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Read Entire Article