புளியங்குடி: புளியங்குடி அருகே சாலையில் கிடந்த ரூ.5 லட்சத்தை மீட்டு ஒப்படைத்த விவசாயிக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர். நகைகடன் செலுத்த செல்லும் வழியில் பணத்தை தவற விட்ட வியாபாரியிடம் பணத்தை போலீசார் ஒப்படைத்தனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன்.புதுக்குடி கற்பகவீதி 1வது தெருவைச் சேர்ந்தவர் தங்கச்சாமி (50), விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது மனைவி ஜோதியுடன் விவசாய பணிக்காக டிஎன்.புதுக்குடி மேற்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது சாலையில் மஞ்சள் நிற பை கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை பார்த்தார். பையை எடுத்து பார்த்தபோது அதில் ரூ.5 லட்சம் நோட்டு கட்டாக இருப்பதை கண்டார். இதனை தவற விட்ட நபர் யாரோ? அவர் எப்படி பணத்தை தொலைத்து விட்டு தவித்து இருப்பார்? என்று எண்ணிய அவர் அவற்றை உரியவரிடம் ஒப்படைக்கும் நோக்கில் அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்து உரியவர் யார்? என விசாரித்துள்ளார்.
ஆனால் தவறவிட்ட நபர் யார் என்பது உடனடியாக தெரியாத நிலையில் ரூ.5 லட்சம் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் பையை புளியங்குடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தரிடம் ஒப்படைத்தார். விவசாயி தங்கச்சாமியின் நேர்மையை இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் பாராட்டினார். அப்போது ரூ.5 லட்சத்தை சாலையில் தவறவிட்ட நபர், புளியங்குடி காவல் நிலையத்திற்கு வந்தார். விசாரணையில் அவர் புளியங்குடி நாட்டாமை அருணாசலம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த மளிகை கடைக்காரர் பாலமுருகன் (44) என்பதும், அவர் தனது நகைகளை வங்கியில் அடமானம் வைத்திருப்பதும் அதனை மீட்பதற்காக பையில் ரூ.5 லட்சத்துடன் பைக்கில் வங்கிக்கு சென்ற போது பை சாலையில் தவறி விழுந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகனிடம் ரூ.5 லட்சம் ஒப்படைக்கப்பட்டது.
சாலையில் கண்டெடுத்த ரூ.5 லட்சத்திற்கு ஆசைப்படாமல் அதனை உரியவரிடம் ஒப்படைத்த தங்கச்சாமி மற்றும் அவரது மனைவியின் நேர்மையை பாராட்டி இன்ஸ்பெக்டர் சால்வை அணிவித்தார். இதுபோல் பாலமுருகனும், விவசாயி தங்கச்சாமியின் நேர்மையை பாராட்டி பழங்கள் வழங்கி நன்றி தெரிவித்தார். அப்போது எஸ்.ஐ.மாடசாமி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
The post புளியங்குடியில் சாலையில் கிடந்த ரூ.5 லட்சத்தை போலீசில் ஒப்படைத்த விவசாயி appeared first on Dinakaran.