புரட்டாசி சனிக்கிழமை சிறப்புகள்

1 day ago 2

பெருமாளை வழிபட உகந்த மாதமான புரட்டாசி மாதம் தொடங்கி உள்ள நிலையில், இந்த மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் விலகி, வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது.

பெருமாள் கோவில்களில் புகழ்பெற்றது, திருப்பதி வெங்கடாசலபதி கோவில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்துவந்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கோவிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் எப்படி வழிபடுவது என்று தெரியாது. "பெருமாளே, நீயே எல்லாம்" என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார்.

ஒருமுறை அவருக்கு மனதில் ஒரு எண்ணம் உதித்தது. "பெருமாளைப் பார்க்க கோவிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன?" என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடிந்ததும் மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.

அந்த ஊரைச் சேர்ந்த அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர் சனிக்கிழமைகளில் ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் ஆலயம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை கிடந்தது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் அரண்மனை திரும்பினார்.

அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டு மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்தியம் செய்யப்படுகிறது. புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம். அதேநேரம் புரட்டாசி சனிக்கிழமை சனி பகவான் அவதரித்த நாள். அதன் காரணமாகவே சனி பகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது.

Read Entire Article