
தஞ்சாவூர்:
தஞ்சையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில். அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் இக்கோவிலும் ஒன்று. இந்த கோவில் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது என்பது தனிச் சிறப்பு. இதனால் கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும்.
தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் இக்கோவிலில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கான யாகபூஜைகள் செய்வதற்காக 41 யாக குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாக சாலை அமைக்கப்பட்டது. இங்கு கடந்த 3-ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமத்துடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. கடந்த 7-ம் தேதி கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் நடந்து வந்தன.
இன்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து மஹா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, யாத்ராதானம் நடைபெற்றது.
பின்னர், யாகசாலையில் இருந்து மாரியம்மன் மற்றும் பரிவார கலசங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மேளவாத்தியங்களுடன் ராஜகோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள் தலையில் புனிதநீர் சுமந்து வந்தனர். தொடர்ந்து, புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் ஓத சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் 10 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன், விஷ்ணு துர்க்கை, பேச்சியம்மன் மற்றும் ராஜ கோபுரங்களில் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் வானில் கருடன் வட்டமிட்டது. பின்னர், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் செய்தபின்னர், பக்தர்கள் மீது புனிதநீர் ஷவர் மூலம் தெளிக்கப்பட்டது.
இன்று இரவு 7 மணிக்கு மாரியம்மன் திருவீதிஉலா நடைபெற உள்ளது. நாளை முதல் மண்டலாபிஷே பூஜைகள் நடைபெறும்.