பிடி இறுகுகிறது

3 hours ago 3

கன்னட நடிகர் தர்ஷன் சாண்டல்வுட்டில் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்தார். இவர் நடிகர் அம்பரிஷின் நன் மதிப்பை பெற்றவர். இதனால் தான் மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட சுமலதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். இப்படி சினிமா, அரசியலில் கொடிகட்டி பறந்த தர்ஷனுக்கு நடிகை பவித்ரா கவுடாவுடன் ஏற்பட்ட நெருக்கம் அவரது சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. பவித்ராவால் தர்ஷன் குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது. தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி நேரடியாகவே பவித்ரா கவுடாவுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இருந்தாலும் தர்ஷன் அவரது உறவை கைவிடவில்லை. இது தர்ஷனின் ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை. பவித்ரா கவுடாவை சமூகவலைதளத்தில் மோசமாக சித்தரித்து வசைபாடினர். அதில் மிக தீவிரமாக விமர்சனங்களை முன்வைத்தவர் தான் ரேணுகாசாமி என்ற ரசிகர். இதனால் ஆத்திரமடைந்த பவித்ரா கவுடா, தன்னை சமூக வலைதளங்களில் கேவலமாக சித்தரிப்பதாக தர்ஷனிடம் சொல்லி அழுதார். உடனே, ரேணுகாசாமியை கடத்தி கொண்டு வந்து தனது காதலி கையாலேயே அடிக்க
வைத்தார். மேலும் தர்ஷன் சிலருடன் சேர்ந்து அவரை துன்புறுத்தியுள்ளார். இதனால் அவர் உயிரிழந்தார்.

இந்த கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்ட நிலையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அங்கும் அவர் சிறை விதிகளை மதிக்காமல் சிறையில் உள்ள மர நிழலில் நாற்காலி போட்டு அமர்ந்து பிரபல ரவுடிகளுடன் டீ சாப்பிட்டுக்கொண்டே, புகை பிடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. சிறையில் மேற்ெகாண்ட சோதனையில் விலையுயர்ந்த செல்போன்கள், சிகரெட் பாக்கெட்டுகள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து சிறைஅதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் சிறைத்துறை உடனடி நடவடிக்கை எடுத்து, தர்ஷன் உள்பட ரேணுகாசாமி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை வேறு வேறு சிறைக்கு மாற்றினர்.

தற்போது பல்லாரி சிறையில் தர்ஷன் அடைக்கப்பட்டுள்ளார். பவித்ரா கவுடா பெங்களூரு சிறையிலேயே இருக்கிறார். பல்லாரி சிறையில் நடிகர் தர்ஷனை அவரது மனைவி விஜயலட்சுமி சந்தித்து ஜாமீன் எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் சிறையில் தனியாக டிவி, செய்தி தாள்கள், கூடுதல் வசதி கேட்டு தர்ஷன் அடிக்கடி சிறை அதிகாரிகளுடன் சண்டை போட்டு வருகிறார். ஆனால், நீதிமன்ற அனுமதியின்றி எந்த வசதியும் செய்து தர முடியாது என்று சிறை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மேலும், தர்ஷன் சிறை அதிகாரிகளுடன் சண்டை போடுவதால் அவரது ஜாமீனில் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ரேணுகாசாமி மீதான குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். அதில் முதல் குற்றவாளியாக பவித்ரா கவுடாவையும், 2வது குற்றவாளியாக தர்ஷனையும் சேர்த்துள்ளனர். குற்றப்பத்திரிகையில் இருக்கும் விவரங்கள் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியிட தடை கோரி தர்ஷன் நீதிமன்றத்தை அணுகினார். அதன்படி நீதிமன்றமும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு பிடி இறுகுகிறது என்றே சட்டநிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புகழ்பெற்ற நடிகர் ஒரு பெண்ணுக்காக கொலை வழக்கில் சிக்கி தனது வாழ்க்கையை பாழாக்கி கொண்டது துரதிஷ்டவசமானது.

The post பிடி இறுகுகிறது appeared first on Dinakaran.

Read Entire Article