பாராலிம்பிக்கில் தமிழக வீராங்கனைகள் சாதனை

1 week ago 8

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். இந்தத் தொடரில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றனர்.

இந்த பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன், இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். பாரிசில் நடைபெறும் பாராலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன், சீன வீராங்கனையான கியுஷியா யாங்கை எதிர்கொண்டார்.

இதில் 17-க்கு 21, 10க்கு 21 என்ற செட் கணக்கில் துளசிமதி முருகேசன் தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். இதேபோல், வெண்கலத்துக்கான பேட்மிண்டன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 19 வயதே ஆன மனிஷா ராமதாஸ், டென்மார்க் வீராங்கனை கேத்ரின் ரோஷன் கிரேனுடன் மோதினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மனிஷா ராமதாஸ், 21-க்கு 12, 21-க்கு 18 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதே போல், தமிழகத்தைச் சேர்ந்த நித்ய ஸ்ரீ சிவன் பேட்மிண்டன் போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை ரினா மர்லினாவை 21க்கு 14, 21க்கு 26 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். மகளிருக்கான பேட்மிண்டன் போட்டியில் 3 பதக்கங்களை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள தமிழக வீராங்கனைகளுக்கு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்
வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

The post பாராலிம்பிக்கில் தமிழக வீராங்கனைகள் சாதனை appeared first on Dinakaran.

Read Entire Article