
கராச்சி,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெள்ளைப்பந்து (டி20 மற்றும் ஒருநாள்) பயிற்சியாளராக மைக் ஹெசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் 26-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
50 வயதான இவர் ஏற்கனவே நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்துள்ளார். அத்துடன் ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இவரது பயிற்சியின் கீழ் பெங்களூரு அணி சிறப்பான செயல்பாட்டையே வெளிப்படுத்தியது.
பாகிஸ்தான் வெள்ளைப்பந்து அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஆகிப் ஜாவேத்துக்கு பதிலாக தற்போது மைக் ஹேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் நிர்ணயிக்கப்படவில்லை.
இவரது முதல் பணி எதிர்வரும் வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆரம்பமாக உள்ளது. சமீப காலமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சறுக்கலை சந்தித்து வரும் பாகிஸ்தான் இவரது தலைமையின் கீழ் வெற்றிப்பாதைக்கு திரும்பும் என்று கருதப்படுகிறது.
