
மும்பை,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், தனது 2 ஆட்டங்களிலும் தோற்று பரிதாபமாக வெளியேறியது.
இதனால் அந்த அணியை அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். சரியாக விளையாட வீரர்களை நீக்க வேண்டும் என்றும் கேப்டன், பயிற்சியாளர்கள் அனைவரையும் மாற்ற வேண்டும் என்றும் தொடர்ச்சியாக விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் கூறுகையில், "வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் போன்ற பெரிய வீரர்கள் பாகிஸ்தானை விமர்சனம் செய்வது அருவருப்பான விஷயமாகும். அதை அருகில் இருப்பவர்கள் கேட்டு சிரிக்கின்றனர்.
அதை நினைத்து அவர்கள் வெட்கப்பட வேண்டும். நீங்கள் உங்கள் வீரர்களை விராட் - ரோகித் சர்மாவுடன் ஏன் ஒப்பீடுகிறீர்கள்? நீங்கள் வர்ணனையாளராக பணம் சம்பாதிக்கிறீர்கள். அந்த பணியை விட்டுவிட்டு, உங்களது நாட்டுக்கு சென்று பயிற்சி முகாம்களை நடத்தி வீரர்களுக்கு உதவ வேண்டும். அதை செய்ய முடியவில்லை என்றால் என்னிடம் பாகிஸ்தான் அணியை கொடுங்கள்.
ஓராண்டுக்குள் புதிய அணியை கட்டமைத்து வெற்றிகரமான அணியாக மாற்றுகிறேன். அதன் பின்னர் நீங்கள் என்னை ஞாபகம் வைத்து கொள்வீர்கள். எல்லாமே ஆர்வத்தை சார்ந்தது. நான் தினமும் 12 மணி நேரம் எனது அகாடமியில் வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கிறேன். உங்கள் இரத்தத்தையும் வியர்வையையும் உங்கள் நாட்டு மக்களுக்கும், வீரர்களுக்கும் அர்ப்பணிக்க வேண்டும். வர்ணனையாளர் அறையில் உட்கார்ந்து கொண்டு பேசுவதால் எந்த பயனும் கிடையாது' என்று கூறினார்.