சென்னை: எல்கேஜி, யுகேஜி மாணவர்கள் போல ஒன்றிய, மாநில அரசுகள் சண்டையிடுகின்றன என்ற தவெக தலைவர் விஜய்க்கு, பல பிஎச்டிக்களை முடித்த கட்சி திமுக என்று அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்தார். சென்னை கிழக்கு மாவட்டம், எழும்பூர் வடக்கு பகுதி சார்பில் புளியந்தோப்பு, மோதிலால் தெரு மற்றும் சூளை, தட்டான்குளம், நல்லமுத்து தெரு ஆகிய பகுதிகளில் நேற்று அன்னம் தரும் அமுதகரங்கள் நிகழ்வில் கலந்துகொண்டு ஏழை, எளிய மக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு உணவு வழங்கினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ்நாடு வரும்பொழுது எல்லாம் தமிழ்நாட்டில் புதிய பிரச்னைகளை உருவாக்கி மக்களை திசை திருப்ப பார்க்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழை விரும்புவேன் என்பார், உத்தரபிரதேசம் சென்றால் இந்தியை விரும்புவேன் என்பார். இது போன்ற இரட்டை நாக்கை கொண்டோர் பேச்சுக்கெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள். மக்கள் நலத்திட்டங்களுக்காக புதிய புதிய பிரச்னைகளை முதல்வர் கையில் எடுத்துக் கொண்டுள்ளார். எல்கேஜி, யுகேஜி மாணவர்கள் போல மாநில அரசும், ஒன்றிய அரசும் சண்டை போட்டுக் கொள்கிறது என விஜய் கூறியுள்ளார். ஆனால் திமுக பல பி.எச்.டி.க்களை முடித்த கட்சி என்பதை விஜய் உணர வேண்டும்.
தமிழ்நாட்டில் சிவராத்திரி விழா மிகவும் கோலாகலமாக நடந்தது. அதிலும் எங்காவது பிரச்னைகளை உருவாக்கலாம் என்று சங்கிகள் நினைத்தார்கள். ஆனால் அது நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது திருக்கோயில்களில் சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடந்துள்ளது. இனத்தால், மொழியால், மதத்தால், மக்களைப் பிளவுபடுத்துகின்ற சூழல் வரும்பொழுது இரும்புக்கரம் கொண்டு அடக்கக்கூடிய முதல்வர் தமிழ்நாட்டில் இருக்கிறார் இவ்வாறு அவர் கூறினார்.
The post பல பிஎச்டிக்களை முடித்த கட்சி திமுக: விஜய்க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி appeared first on Dinakaran.