பரந்தூர்: மத்திய அரசு அளித்த ஆய்வு வரையறையை திரும்பப் பெற வேண்டும் - சீமான்

1 week ago 9

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"பரந்தூரில் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சிக் கழகம் முன்மொழிந்துள்ள திட்டத்திற்கான சூழலியல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுக்கான வரையறையை ஒன்றியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். இந்த ஆய்வு வரையறையினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.

வானூர்தி நிலையம் அமைப்பதை எதிர்த்து 775 நாட்களுக்கு மேலாக போராடி வரும் பரந்தூர் ஏகனாபுரம் மக்களின் உணர்வுகளை மதிக்காமல், அவர்களை ஒருமுறை கூட நேரில் சந்திக்காமல் ஒன்றிய-மாநில அரசுகள் இத்திட்டத்தைச் செயல்படுத்த நினைப்பது, மக்களாட்சி மாண்பினைக் காலில் போட்டு மிதிக்கும் செயலாகும். தமிழ்நாட்டில் இராம்சார் தளங்களை (Ramsar Sites) அறிவித்ததற்குப் பெருமைகொள்ளும் நாட்டின் முதன்மை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களின் அதே அரசு ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவில் ஈர நிலங்கள் மற்றும் வேளாண் பகுதிகளைக் கையகப்படுத்தி வானூர்தி நிலையம் அமைக்க அனைத்து வழிகளையும் அமைத்துத் தருவது பாஜக அரசின் உண்மை முகத்தைக் காட்டுகிறது.

தமிழ்நாட்டின் வளங்களை அழிக்கும் நோக்கிலேயே செயல்பட்டு வரும் ஒன்றிய அரசினை தமிழ்நாட்டு மக்கள் முற்றிலுமாகப் புறக்கணிப்பதில் வியப்பேதுமில்லை. இனியும் இப்போக்கினைத் தொடராமல், இத்திட்டத்திற்கான முன்னெடுப்புகளையும் அனுமதிகளையும் கைவிட்டு, பரந்தூர் வானூர்தி நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினருடைய கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து செயற்பட வேண்டும் என்று ஒன்றிய-மாநில அரசுகளை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Read Entire Article