நெல்லை: நெல்லையில் இருந்து மும்பை வழியாக குஜராத்திற்கு தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர். இதற்காக ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் ரயில்களை இணைத்து இயக்கிட வாய்ப்புகள் உள்ளன. இந்தியன் ரயில்வே ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் சில ரயில்களை இணைத்து நீண்ட தூர ரயில்களாக இயக்கி வருகிறது. தென்மாவட்டங்களை பொருத்தவரையில், ஏற்கனவே மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ், 3 ரயில்களை இணைத்து இயக்கப்பட்டு வருகிறது. அதுபோல செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலும் இணைப்பால் உருவான ரயிலாகும். அதுபோல நெல்லையில் இருந்து குஜராத்திற்கும் தினசரி ரயில் இயக்கிட வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர். நெல்லையில் இருந்து குஜராத் மாநிலத்திற்கு செல்லும் வகையில் தற்போது வாரத்திற்கு 3 நாட்கள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நெல்லையில் இருந்து ஹபா எக்ஸ்பிரஸ், வாராந்திர எக்ஸ்பிரசாக நெல்லை – காந்திதாம் எக்ஸ்பிரசும் செல்கின்றன. அடுத்ததாக நாகர்கோவிலிருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திதாம் என்ற இடத்திற்கு செல்ல வாராந்திர ரயில் சேவை பல ஆண்டுகளாக உள்ளது. எனவே தற்போது மொத்தம் நான்கு சேவைகள் உள்ளன. நெல்லை – குஜராத் தினசரி ரயில் சேவைக்கு இன்னமும் வாரத்திற்கு 3 சேவைகள் மட்டுமே தேவைப்படுகிறது. இதற்காக எர்ணாகுளத்திலிருந்து குஜராத் மாநிலம் ஓகாவிற்கு இயக்கப்படும் வாரம் இருமுறை ரயிலை நெல்லை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். மேலும் மட்கானில் இருந்து ஓகா செல்லும் ரயிலையும் நெல்லை வரை நீட்டிப்பு செய்து நெல்லை – ஜாம்நகர் அல்லது நெல்லை – ஓஹா என தினசரி ரயிலாக இயக்கிடலாம்.
இதுகுறித்து தென்மாவட்ட ரயில்கள் பயணிகள் சங்க நிர்வாகி ஸ்ரீராம் கூறுகையில், ‘‘சில ரயில்களை இணைப்பதன் மூலமும், நீட்டிப்பதன் மூலமும் நெல்லையில் இருந்து குஜராத் மாநிலத்திற்கு தினசரி ரயிலை இயக்கிட முடியும். நெல்லையில் இருந்து கேரளா வழியாக செல்லும் ரயில்கள் குஜராத் செல்லும் ரயில்கள் அனைத்தும் மும்பையை தொட்டு செல்கின்றன. மும்பைக்கு விரைந்து செல்லும் தென்மாவட்ட மக்களின் தேர்வு இப்போது ஹபா எக்ஸ்பிரசாக உள்ளது. இந்த ரயில் மும்பைக்கு கேரள மார்க்கமாக விரைந்து செல்லும் ரயிலாக உள்ளது. எனவே நெல்லையில் இருந்து ஹபா அல்லது ஓஹாவிற்கு தினசரி ரயில் இயக்கப்பட்டால், மும்பைக்கு தினசரி ரயில் இல்லை என்ற குறையும் தீரும். மேலும் நெல்லை, குமரி மக்கள் கேரளாவின் பல பகுதிகளுக்கு எளிதாகச் செல்ல முடியும். மும்பைக்கு செல்வதற்கான பெரும்பாலான ரயில் சேவைகள் மதுரை, திண்டுக்கல் மார்க்கமாக உள்ள நிலையில், கேரள மார்க்கமாக ஒரு தினசரி ரயில் தேவையாகும்’’ என்றார்.
The post நெல்லையில் இருந்து கேரளா வழியாக குஜராத்துக்கு தினசரி ரயில் இயக்கப்படுமா?.. தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.