நெல்லில் உயர் மகசூல் பெற விதைப்பரிசோதனை அவசியம்!

1 week ago 7

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதுபோல தரமான விதை இருந்தால்தான் சிறப்பான மகசூலைப் பெற முடியும். நெல் சாகுபடிக்கு தரமான விதையை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? தரமான விதை என்றால் எப்படி இருக்கும்? அதன் பயன் எந்தளவுக்கு இருக்கும்? என விளக்குகிறார் திருநெல்வேலி விதைப் பரிசோதனை ஆய்வக வேளாண்மை அலுவலர் ம.மகேஸ்வரன். நல்ல ஒரு பயிரை சாகுபடி செய்து அதிக மகசூல் பெற நல்ல தரமான விதையைத் தேர்வு செய்வது மிகவும் அவசியம். எல்லா தானியமும் விதையாகி விடாது. எல்லா விதையும் நல்ல முளைப்புத்திறன் உள்ள விதைகளாக இருக்க முடியாது. தரமற்ற விதையைப் பயன்படுத்தும்போது மகசூல் இழப்பு ஏற்படும். சாகுபடி மற்றும் உற்பத்திக்கான செலவுகள் அதிகமாகி விவசாயப் பெருமக்களுக்கு பெருத்த இழப்பு ஏற்படும். எனவே, நல்ல விதைத் தேர்வே உயர் மகசூலுக்கு வழிவகுக்கும்.

குறைந்த வயது நெற்பயிர் ரகங்களான அம்பை 16, ஆடுதுறை 36, ஐ.ஆர் 30 போன்றவற்றை 15க்கு 10 செ.மீ (15×10 செ.மீ) என்ற இடைவெளியில் நடும்போது ஒரு சதுர மீட்டருக்கு 66 நாற்றுகள் என்ற அடிப்படையில் ஒரு ஏக்கர் நடுவதற்கு 2,64,000 நாற்றுக்கள் தேவைப்படுகிறது. எனவே ஒரு ஏக்கர் நடுவதற்கு 2,64,000 விதைகள் தேவைப்படுகிறது. இந்த ரகங்களின் 1000 விதைகளின் எண்ணிக்கையின் எடை முறையே 24.2 கிராம், 20.9 கிராம் மற்றும் 20.4 கிராம் என கொண்டு கணக்கீடு செய்தால் 6.388 கிலோ, 5.518 கிலோ, 5.386 கிலோ என்ற அளவில் மட்டுமே ஒரு ஏக்கருக்கு விதைகள் தேவைப்படுகிறது. ஆனால் ஒரு ஏக்கருக்கு குறைந்த வயதுடைய நெற்பயிர் ரகங்களுக்கு 24 கிலோ அளவில் விதையளவு பரிந்துரைக்கப்படுகிறது. இது ஐந்து மடங்கு அதிகமாகும். இதற்குக் காரணம்.

மேற்கூறப்பட்டது போல் எல்லா விதைகளும் நல்ல முளைப்புத்திறன் கொண்டது அல்ல. நெல் அறுவடையின்போது தூசுகள், நெற்சாவிகள் மற்றும் மண் போன்றவை கலந்திருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் நாற்றங்காலில் இருந்து நாற்றுக்களைப் பிடுங்கி நடும்போதும், நடவு செய்யப்படும் வயலில் ஒரு குத்துக்கு அதிக அளவில் நாற்றுக்களை நடவு செய்யும் பட்சத்திலும் நெல் நாற்றுகள் வீணாகிப் போவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதனைக் கருத்தில் கொண்டு ஒரு ஏக்கருக்கு 24 கிலோ என்ற அளவில் விதையளவு பரிந்துரைக்கப்படுகிறது.

ஒரு ஏக்கருக்குத் தேவையான விதையளவை இந்த அளவுக்கு பரிந்துரை செய்த போதிலும், ஆய்வுக்கு உட்படுத்தாத தரமற்ற விதைகளை விதைக்கும்போது பயிர்கள் திடமாக வளராமல் மகசூல் குறைந்து விவசாயிகளுக்கு வருமானம் குறைகிறது. நெற்பயிருக்கு முளைப்புத்திறன் குறைந்தபட்சம் 80 சதவீதம் இருக்க வேண்டும். விதைப்பரிசோதனை ஆய்வகத்தில் பெறப்படும் விதைகளை ஆய்வு செய்யும்போது 100 விதையில் 80 விதைகள் நன்கு திரட்சியாக வேர் மற்றும் தண்டுகளுடன் திடமாக வளர்ந்த நாற்றுகளை இயல்பான நாற்றுகள் எனவும், முளைத்தாலும் வேர் மற்றும் தண்டுகள் திடமாக இல்லாமல் வளைந்தும் நெளிந்தும் வளரும் நாற்றுகளை இயல்பற்ற நாற்றுகள் எனவும் தரம் பிரிக்கப்படுகிறது. சில விதைகள் புத்தம் புதிதாக முளைக்காமல் இருக்கும். இவை முளைக்காத விதைகள் எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

பயிர் எண்ணிக்கையை பராமரிப்பதில் முளைக்கும் ஒவ்வொரு விதையும் முக்கியத்துவம் ஆகும். பயிர் எண்ணிக்கையினைப் பராமரிப்பதின் மூலமே ஒவ்வொரு விவசாயியும் உயர் மகசூல் அடைய முடியும். குறைந்த கால நெற்பயிரான அம்பை 16 ரகத்தை சாகுபடி செய்யும்பொழுது ஒரு ஏக்கரில் 2,64,000 (15×10செ.மீ) நெல் குத்துகளை நடவு செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மேலுரம் மற்றும் அடியுரங்களைப் பயிருக்கு இட்டு அதன்மூலம் ஒரு குத்திலிருந்து 0.9 கிராம் என்ற அளவில் நெல் மணிகளைப் பெறும்பொழுது ஏக்கருக்கு 2376 கிலோ அளவில் மகசூலைப் பெற்று பயன் அடையலாம். எனவே, திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பெருமக்கள் தாங்கள் பயன்படுத்தும் விதைகள் தரமானவையா? என தெரிந்துகொண்டு பயன்படுத்த 100 கிராம் அளவில் நெல் விதைகளை காற்றுப்புகாத பைகளில் அடைத்து ஆய்வுக்கட்டணம் ரூ.80 செலுத்தி ஆய்வு செய்து ஆய்வு முடிவுகளைப் பெறலாம் என்கிறார்.

 

The post நெல்லில் உயர் மகசூல் பெற விதைப்பரிசோதனை அவசியம்! appeared first on Dinakaran.

Read Entire Article