நிலம் வழங்கிய 1686 பேருக்கு ரூ.17 கோடி இழப்பீடு தொகை

2 days ago 3

தர்மபுரி, மே 12: மொரப்பூர் -தர்மபுரி புதிய அகல ரயில் பாதை இணைப்பு திட்டத்திற்கு நிலம் வழங்கிய
1686 பட்டாதாரர்களுக்கு, இழப்பீடு தொகையாக ரூ.17.03 கோடி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சதீஷ் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்ட மக்களின் கனவு திட்டமான மொரப்பூர்-தர்மபுரி புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு, நிலம் எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மொரப்பூர் -தர்மபுரி புதிய ரயில்பாதை அமைக்கும் பணியில், கலெக்டர் சதீஷ் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும், பிரச்னைக்குரிய இடங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து, பொதுமக்களிடம் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்தி வருகிறார்.

கடந்த வாரம் மணியம்பாடி கிராமத்தில், 94 பட்டாதாரர்களிடம் ரயில்வே திட்டப்பணிக்கு நிலம் கேட்டு பெறப்பட்டது. இந்நிலையில், நேற்று, மொரப்பூர் தாலுகா போளையம்பள்ளி மற்றும் தர்மபுரி செட்டிக்கரை ஊராட்சி ராஜாப்பேட்டையில் மொரப்பூர் -தர்மபுரி புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு நிலம் எடுப்பதற்கான பணிகள் குறித்து, கலெக்டர் சதீஷ் கள ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:
மொரப்பூர் -தர்மபுரி புதிய அகல ரயில் பாதை திட்டத்தின் கீழ் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் தர்மபுரி ஆகிய 3 தாலுகாக்களில் 18 கிராமங்களில் பட்டா நிலங்கள் 78.54.56 ஹெக்டேர்(194 ஏக்கர்) நிலஎடுப்பு செய்யவும், அரசு புறம்போக்கு நிலங்கள் 13.43.56 ஹெக்டேர்(33 ஏக்கர்) நிலங்களை மாற்றம் செய்யவும் அரசின் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. மொத்த பட்டா நிலங்கள் 78.54.56 ஹெக்டேர்(194 ஏக்கர்) நிலங்களில் 54.14.54 ஹெக்டேர்(134 ஏக்கர்) நிலங்களுக்கு தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலஎடுப்பு சட்டம் 1997ன்படி, நில எடுப்பு சட்டப்பிரிவு 3(2)ன் கீழான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, நிலஎடுப்பு சட்டபிரிவு 3(1)-ன் கீழான அறிவிக்கையும் 54.14.54 ஹெக்டேர்(134 ஏக்கர்) நிலங்களுக்கு பிரசுரமாகியுள்ளது.

மீதமுள்ள பட்டா நிலங்கள் 24.40.02 ஹெக்டேரில்(60 ஏக்கர்) மூக்கனூர், செட்டிக்கரை, அளே தர்மபுரி, ஏ.ரெட்டிஅள்ளி ஆகிய 4 கிராமங்களில் பொதுமக்களின் நலன் கருதி மாற்றுப்பாதை அமைக்க திருத்திய நில திட்ட அட்டவணை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி 3 மாத்திற்குள் முடிக்கப்படும். அரசு புறம்போக்கு நிலங்கள் 13.43.56 ஹெக்டேர்(33 ஏக்கர்) நிலங்களில் 7.13.43 ஹெக்டேர்(18 ஏக்கர்) நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் 6.29.83 ஹெக்டேர்(15 ஏக்கர்) நிலங்கள் மாற்றுப்பாதையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, தர்மபுரி -மொரப்பூர் ரயில் பாதை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். மொரப்பூர் -தர்மபுரி ரயில்வே பாதை இணைப்பு திட்டத்திற்கு, மொத்தம் 194 ஏக்கருக்கு 34 ஏக்கர் நிலம் எடுக்கப்படுகிறது. இதில், 4322 பட்டாதாரர்கள் உள்ளனர். 1686 பட்டாதாரர்களுக்கு இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் இழப்பீடுத் தொகை வழங்க ரூ.33 கோடியே 54 லட்சத்து 26 ஆயிரத்து 856 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.17 கோடியே 3 லட்சத்து 52 ஆயிரத்து 935 நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதிக்குள் நிலம் எடுக்கும்பணி நிறைவு பெற உள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

தொடர்ந்து, செட்டிக்கரை ஊராட்சி ராஜாபேட்டையில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் பயனாளிகள், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியுடையவர்களா என்பது குறித்து நேரில் பார்வையிட்டு கலெக்டர் சதீஸ் கள ஆய்வு மேற்கொண்டார். மேலும், நகராட்சி சந்தைப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, கணினி வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி மற்றும் மின் வசதிகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார்.ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, அரூர் வருவாய் கோட்டாட்சியர் சின்னுசாமி, தாசில்தார்கள் சண்முகசுந்தரம், கலைச்செல்வி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post நிலம் வழங்கிய 1686 பேருக்கு ரூ.17 கோடி இழப்பீடு தொகை appeared first on Dinakaran.

Read Entire Article