நவக்கிரக தோஷம் நீக்கும் நவதிருப்பதி கோவில்கள்

2 hours ago 4

பெருமாள் பக்தர்களுக்கு பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு தென் மாவட்ட மக்களுக்கு நவ திருப்பதி கோவில்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இந்த தலங்கள் நவக்கிரக பரிகாரத் தலங்களாக கருதப்படுகின்றன.

பொதுவாக 12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களுமே திருப்பதிகள்தான். என்றாலும் நவ திருப்பதி கோவில்களுக்கு என்று பல சிறப்புகள் உள்ளன. 9 திருப்பதிகளிலும் உள்ள பெருமாளே கிரகங்களாக வீற்றிருந்து தோஷ நிவர்த்தி அருள்கிறார். இந்த தலங்கள் அனைத்தும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளன. தாமிரபரணி ஆற்றின் வடகரையில் 6 திவ்யதேசங்களும், தென்கரையில் 3 திவ்யதேசங்களும் உள்ளன. நவதிருப்பதிகள் நவக்கிரகங்களாகப் போற்றப்படுகின்றன. இங்கு பெருமாளே நவக்கிரகங்களின் அம்சமாக கருதப்படுகிறார். அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

நவதிருப்பதி கோவில்களும், கிரகங்களும் வருமாறு:-

1. ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் கோவில் - சூரியன்

2. நத்தம் ஸ்ரீவரகுணமங்கை விஜயாசன பெருமாள் கோவில் - சந்திரன்

3. வைத்தமாநிதி பெருமாள் கோவில், திருக்கோளூர் - செவ்வாய்

4. திருப்புளியங்குடி காய்சினி வேந்த பெருமாள் கோவில் - புதன்

5. ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவில் - வியாழன்

6. தென்திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் கோவில் - சுக்கிரன்

7. திருக்குளந்தை (பெருங்குளம்) மாயக்கூத்த பெருமாள் கோவில் - சனி

8. திருத்தொலைவில்லி மங்கலம், தேவபிரான் கோவில் - இரட்டை திருப்பதி, -ராகு

9. திருத்தொலைவில்லி மங்கலம், அரவிந்தலோசனர் கோவில் - இரட்டை திருப்பதி - கேது

ராகு, கேது. இருவருக்குமான நவ திருப்பதி கோவில் இரட்டை திருப்பதி என்ற ஒரே இடத்தில் மிக அருகாமையிலேயே இருக்கிறது என்பது குறிபிடத்தக்கது.

பொதுவாக, திருமால் ஆலயங்களில் நவகிரக சந்நிதி இருக்காது. திருமாலுக்கு அடிமை செய் என்று அவ்வை மூதாட்டி ஆத்திச்சூடியில் கூறியுள்ளதை போல, திருமால் அடியவர்கள் எம்பெருமானே எல்லாம் என்று இருப்பதால், தனியே நவகிரகங்களை வழிபடுவதில்லை. அத்தகைய அடியவர்களின் கர்ம வினையால், ஏதேனும் கிரகத்தினால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை களையும் பொருட்டு இந்த நவ திருப்பதிகளில் பெருமாள் குடிகொண்டுள்ளார்.

Read Entire Article