நடத்தையில் சந்தேகம்: சுவரில் தலையை முட்டி நர்சு படுகொலை - கணவர் கைது

4 hours ago 2

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா அருகே நெரலகட்டே கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணா (வயது 50). இவரது மனைவி ராதாம்மா (42). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருந்தனர். மூத்த மகன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். தனியார் ஆஸ்பத்திரியில் ராதாம்மா நர்சாக வேலை பார்த்து வந்தார். லட்சுமணா கட்டிட தொழிலாளி ஆவார். அவருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்தது.

தினமும் மதுகுடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் லட்சுமணா சண்டை போட்டு வந்துள்ளார். அதுபோல், நேற்று முன்தினமும் குடிபோதையில் ராதாம்மாவுடன், லட்சுமணா தகராறு செய்தார். அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த அவர், ராதாம்மாவை அடித்து தாக்கியதுடன், அவரது தலையை சுவரில் முட்டியதாக தெரிகிறது. இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த ராதாம்மா பரிதாபமாக இறந்து விட்டார்.

ஆனால் தன்னுடைய மனைவி வீட்டில் தவறி விழுந்து தலையில் காயம் அடைந்து இறந்து விட்டதாக உறவினர்களுக்கும், கிராம மக்களுக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, ராதாம்மாவின் இறுதிக்சடங்குக்கு ஏற்பாடுகளும் நடந்தது. இதற்கிடையில், தொட்டபள்ளாப்புரா புறநகர் போலீசாருக்கு ஒரு நபர் தொடர்பு கொண்டு, லட்சுமணா தன்னுடைய மனைவி கொலை செய்து விட்டதாகவும், போலீசாருக்கு தெரியாமல் இறுதிச்சடங்கு நடத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, நெரலகட்டே கிராமத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். லட்சுமணாவை பிடித்து போலீசார் விசாரித்தனர். முதலில் தனது மனைவி கீழே தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறி நாடகமாடினார். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தனது மனைவியை சுவரில் தலையை முட்டி கொலை செய்ததை லட்சுமணா ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

தனியார் ஆஸ்பத்திரியில் ராதாம்மா நர்சாக இருந்ததால், அவரது நடத்தையில் சந்தேகப்பட்டும், குடிபோதையிலும் லட்சுமணா அவரை கொன்றது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் மூத்த மகன் இறந்த பின்பு ராதாம்மாவும் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான லட்சுமணாவிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article