தொலைந்த பொருளும் ஜோதிடமும்!

20 hours ago 3

வாழ்வில் நடக்கின்ற நிகழ்வுகளுக்கு காரண காரியம் உண்டு. நாம் பிரச்னையை மட்டுமே சிந்திக்கிறோம். ஆனால், பிரச்னைக் குரிய காரண காரியம் தெரிந்தால் பிரச்னை பெரிதல்ல என்பதே உண்மை. உண்மையில் பிரச்னைக்குரிய காரண காரியங்கள் தெரிந்து கொள்வதற்கு முன்பே பல விஷயங்களை தொலைத்திருப்போம். காலம், வாய்ப்புகள், நண்பர்கள், நல்ல வார்த்தை, நம்பிக்கையான மனிதர்கள் போன்றவற்றை இழந்திருப்போம். காலம் அவற்றை சுட்டிக்காட்டும். அப்பொழுது நினைவுகளில் நம் தவறுகள் புரியத் தொடங்கும். இதுவே எல்லோர் வாழ்விலும் நிதர்சனமான உண்மை. நமக்குரிய பொருளை தொலைத்திருப்போம். அது ஏன் தொலைந்தது? எப்படி தொலைந்தது? என்று அறியாதிருப்போம். நிகழ்வுகளுக்கு காரணம் கிரகங்கள். கிரகங்கள் குறிப்பிட்ட பாவகங்களில் அமர்ந்திருக்கும் போது சில நிகழ்வுகளைச் செய்து சென்றுவிடும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதில், மனிதர்களும் அடங்குவர் என்பதுதான் ஆச்சர்யம். தொலைந்து போன பொருட்களை பற்றியும், அதனை மீட்டெடுப்பதற்கான வழிகளையும் சிந்திப்போம்.

பொருட்கள் எப்பொழுது தொலைந்து போகும்?

ஒருவருக்கு ஆறாம் (6ம்) பாவகமும் எட்டாம் பாவகமும் (8ம்) தொடர்பு ஏற்பட்டால் பொருட்கள் ஏதேனும் தொலைந்து போகும் வாய்ப்புகள் அதிகம். இந்த பாவகங்கள் ஆறாம் (6ம்) பாவக திசையில் எட்டாம் பாவக புத்தியில் நிகழலாம். எட்டாம் பாவக திசையில் ஆறாம் பாவக புத்தி நடக்கும் பொழுது நிகழலாம். சிலருக்கு நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்து ஏமாற்றிவிடுவார்கள். அவர்களிடம் எந்த ஆதாரமும் இருக்காது. இதுவும் தொலைந்து போன வரிசையில் வந்து சேரும். ஆனாலும், தொடர்ந்து இவர்கள் இதனைச் செய்து கொண்டே இருப்பார்கள். கிரகங்கள் இதனை செய்ய வைத்துக் கொண்டே இருக்கும். நிகழ்கால கோட்சார பிரசன்னத்தில் இவர்களுக்கு ஆறாம் (6ம்) பாவகத்திலும் எட்டாம் பாவகத்திலும் (8ம்) கிரகங்கள் அடைப்பட்டு இருக்கும் போது நிகழ்வதற்கு அதிகமாக வாய்ப்புகள் உண்டு. இந்த அமைப்புள்ளவர்கள் இருக்கும் இடத்தில், அடிக்கடி பொருட்கள் தொலைந்து போகும். ஆகவே, இவர்கள் சந்தேகத்திற்கு ஆளாவார்கள் என்பது உண்மை. இவர்களின் ஜாதகத்தில் ஆறாம் (6ம்) பாவகத்திலும் எட்டாம் பாவகத்திலும் அதிகப்படியான கிரகங்கள் இருக்கும்.

என்ன செய்தால் பொருட்கள் தொலைந்து போகாமல் இருக்கும்?

ஆறாம் பாவக (6ம்), எட்டாம் பாவக (8ம்) அதிதேவதைகளுக்கு அபிஷேக அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தி அங்கு வழங்கப்படும் நிவேத்தியத்தை வீட்டிற்கு எடுத்து வராமல் அங்கேயே எல்லோருக்கும் தானம் செய்துவிட்டு வந்தால், இந்தப் பிரச்னைகளில் இருந்து இவர்கள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பர்.

என்னென்ன பொருட்கள் எதனால் தொலைந்து போகும்?

ஆறாம் பாவத்தில் சனியும் (6ம்) எட்டாம் பாவத்தில் (8ம்) வியாழன் இருந்தாலும் பார்வை செய்தாலும் நகை, பணம், விலை மதிக்க முடியாத பொருட்கள் தொலைந்து போகும். ஆறாம் பாவத்திலும் (6ம்), எட்டாம் பாவத்திலும் (8ம்) சுக்கிரன் – சனி தொடர்பு கொள்ளும் காலக் கட்டத்தில் வாகனங்கள் தொலைந்து போவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. நான்காம் (4ம்) பாவத்திற்கு உரிய கிரகங்கள் எட்டாம் பாவத்தில் (8ம்) மறையும் பொழுது வாகனத்தின் சாவி, மோதிரம், எப்பொழுதும் பயன்படுத்தும் உடமைகள் ஆகியவைகளும் தொலைந்து போக வாய்ப்புகள் உண்டு.பொதுவாகவே பொருட்கள் தொலைந்து போவதற்கு ஜோதிடத்தில் சொல்லப்படும் காரணங்கள் சென்ற பிறவியில் யாருக்கும் கொடுக்கப்படாத தானத்தை இப்பிறவியில் இழக்க நேரிடுவதை குறிக்கிறது. காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பதே ஜோதிடம் என்ற இயற்கை அறிவியல் நமக்குச் சொல்கிறது.

தொலைந்து போன பொருட்களை பெறுவதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்.

*முதலில் வீட்டின் அருகே இருக்கக்கூடிய எல்லை தெய்வங்கள் அல்லது காவல் தெய்வங்களுக்கு பொருள் திரும்ப கிடைக்க வேண்டும் என பிரார்த்தனையை நான்கு வாரங்களுக்கு வைத்து வழிபாடு செய்யுங்கள்.

*எந்தக் கிழமையில் பொருட்கள் தொலைந்ததோ அந்த கிழமைக்குரிய கிரகங்களுக்கான பொருட்களை தானம் செய்யுங்கள். ஞாயிறு என்றால் கோதுமை, திங்கள் என்றால் அரிசி, செவ்வாய் என்றால் துவரை, புதன் என்றால் பச்சைபயிறு, வியாழன் என்றால் கொண்டைகடலை, வெள்ளி என்றால் மொச்சை பயிறு, சனி என்றால் எள் அல்லது ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் செய்யுங்கள்.
*ஞாயிற்றுக்கிழமை என்றால் சூரியனுக்கு அல்லது சிவனுக்கு நிவேதனம், அர்ச்சனை செய்து அந்தப் பொருட்களை அங்கேயே தானம் செய்து விடுங்கள்.
*திங்கட்கிழமை தொலைந்திருந்தால், இரண்டு முதல் மூன்று பேருக்கு அன்னதானம் செய்யுங்கள். பின்பு அம்பாளுக்கு ஒரு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.
*செவ்வாய்க்கிழமை தொலைந்திருந்தால், முருகனுக்கு அர்ச்சனை செய்து நிவேதனத்தை அங்கேயே தானம் செய்து. விடுங்கள்.
*புதன்கிழமை தொலைந்திருந்தால், பெருமாளுக்கு அர்ச்சனை செய்து நெய்வேத்தியத்தை அங்கேயே தானம் செய்து வாருங்கள்.
*வியாழக்கிழமை தொலைந்திருந்தால், சிவனுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை வைத்து நிவேதனம் செய்து அதை அங்கேயே தானம் செய்து வாருங்கள்.
*வெள்ளிக்கிழமை தொலைந்திருந்தால், மாரியம்மனுக்கு இனிப்பான பொருட்களை வைத்து நிவேதனம் செய்து அங்கே தானம் செய்து வாருங்கள்.
*சனிக்கிழமை தொலைந்திருந்தால், சனி பகவானுக்கு அல்லது வீட்டின் அருகில் இருக்கும் கருப்பண்ண சுவாமி மற்றும் காவல் தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்து நிவேதனத்தை அங்கே தானம் செய்து வாருங்கள்.
*புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரைக்காசு அம்மனை மனமுருகி பிரார்த்தித்து ஒரு மஞ்சள் துணியில் ஒரு நாணயத்தை முடிந்து வேண்டினால் தொலைந்த பொருட்கள் கிடைப்பதற்கு இந்த அன்னையின் ஆசி என்றும் உண்டு. பொருள் கிடைத்தவுடன் முடிந்து வைத்த காசை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி. அம்மனுக்கு அர்ச்சனை செய்து வாருங்கள்.

 

The post தொலைந்த பொருளும் ஜோதிடமும்! appeared first on Dinakaran.

Read Entire Article