*சிபிஐ அதிகாரிகள் அதிரடி
திருமலை : ரூ.70 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரித்துறை ஆணையர் உட்பட 6 பேரை சிபிஜ அதிகாரிகள் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் ஜீவன் லால் நாயக் என்பவர் வருமான வரித்துறை ஆணையராக பணியாற்றி வருகிறார். மேலும் அதே துறையில் மேல்முறையீட்டு பிரிவுகள் 7 மற்றும் 8க்கான வருமான வரி முதன்மை தலைமை ஆணையராகவும் கூடுதல் பொறுப்புகளை கவனித்து வருகிறார்.
இந்நிலையில் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமம் தொடர்பான வரி மேல்முறையீட்டு வழக்குக்காக ஜீவன் லால் நாயக் தலைமையிலான வருமான வரித்துறை குழுவினர் மும்பைக்கு சென்றனர். வழக்கின் தீவிரத்தை உணர்ந்த ஜீவன்லால் நாயக் குழுவினர், ரூ.70 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நிறுவனம் சிபிஐயில் புகார் அளித்தது.
அதனடிப்படையில் சிபிஐ கடந்த 9ம் தேதி மொத்தம் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. அதைத்தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் மும்பை, ஐதராபாத், கம்மம், விசாகப்பட்டினம் மற்றும் புதுடெல்லி உள்ளிட்ட 18 இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் லஞ்சமாக வாங்கிய ரூ.69 லட்சம் பணம், பல்வேறு குற்றவியல் ஆவணங்கள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது, இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டு வந்த சஜிதா மஜார் ஹுசைன் ஷா என்பவரை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தினர். அதனடிப்படையில், வழக்கின் முக்கிய மூளையாக செயல்பட்ட வருமான வரித்துறை ஆணையரான ஜீவன்லால் நாயக்கை ஐதராபத்தில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
தொடர்ந்து, இதில் தொடர்புடைய ஜீவன்லால் நாயக்குடன் மும்பையில் உள்ள ஷாபூர் ஜி பல்லோன்ஜி குழுமத்தின் துணைப் பொது மேலாளர் (வரி) வைரல் காந்திலால் மேத்தா, ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த சாய்ராம் பாலிஷெட்டி, விசாகப்பட்டினத்தை சேர்ந்த நட்டா வீரநாக் ஸ்ரீராம் கோபால், மும்பையைச் சேர்ந்த சஜிதா மஜார் ஹுசைன் ஷா உள்ளிட்டோரை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பையில் கைது செய்யப்பட்டவர்கள் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கைது செய்யப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
The post தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் ரூ.70 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரித்துறை ஆணையர் கைது appeared first on Dinakaran.